பொம்மை விமர்சனம்: நல்ல ஒன்லைன்தான்; ஆனால் உளவியல் சிக்கல் பேசும் காதல் கதையில் இத்தனை சிக்கல்களா?!

துணிக்கடை பொம்மைகளைத் தயாரிக்கும் நிறுவனத்தில் ஓவியராகப் பணிபுரிகிறார் ராஜு (எஸ்.ஜே.சூர்யா). சிறுவயது முதலே மனநல பிரச்னைக்காக மருந்துகள் எடுத்துக்கொண்டிருக்க, தற்போது விரக்தியில் அதை நிறுத்திவிடுகிறார். அப்படியிருக்கையில் குறிப்பிட்ட ஒரு பொம்மையின் கண்களை வரைந்து கொண்டிருக்கும் போது அவருக்குள் ரசவாத உணர்வு ஏற்படுகிறது.

அது சிறு வயதில் காணாமல் போன தன் பால்ய காலத்து சிநேகிதியான நந்தினியை (பிரியா பவானிசங்கர்) அந்த ஜவுளிக்கடை பொம்மையின் வழியாக அவர் கண்முன் நிறுத்துகிறது. கற்பனை காதலியின் அரவணைப்பு அவருக்கு ஆறுதலைத் தர, மாத்திரைகளை முற்றிலுமாகப் புறக்கணிக்கிறார். இதன் பின் தன் காதலுக்காக அவர் செய்யும் திடுக் சம்பவங்களும், குற்றங்களும்தான் படத்தின் கதை.

பொம்மை விமர்சனம்

பொம்மையைக் காதலிக்கும் கதாபாத்திரத்தில் இஷ்டத்துக்கு நடித்துத் தள்ளியிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. க்ளைமாக்ஸுக்கு முந்தைய காட்சியில் கதாபாத்திரத்தின் அழுத்தமான உணர்வினை மட்டும் அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால் அதற்கு முன்னர் பல காட்சிகளில் நடிப்பு கொஞ்சம் ஓவர்டோஸாகி நம்மையும் சோதிக்கிறது. மிகை நடிப்பின் மீட்டரை எஸ்.ஜே.சூர்யா கவனத்தில் கொள்வது அவசியம்.

பொம்மையாக நடித்துள்ள பிரியா பவானிசங்கரிடமும் அதே குறைதான் வெளிப்படுகிறது. அந்தப் பாத்திரமும் அப்படியானதாகவே எழுதப்பட்டிருப்பதும் சிக்கல். மற்றொரு நாயகியாக சாந்தினி தமிழரசன் தனக்குக் கொடுக்கப்பட்ட சிறு வாய்ப்பினைச் சரியாகப் பயன்படுத்தியுள்ளார்.

அதீத உளவியல் கற்பனைகளைச் சுமந்திருக்கும் கதைக்கரு எனும்போது திரைக்கதையில் கொஞ்சமேனும் புதிதாக ஏதாவது செய்ய முற்பட்டு இருக்கலாம். ஆனால் இயக்குநர் ராதாமோகனின் வழக்கமான ஃபீல்குட் சுவையும் இல்லாமல், புதிய உளவியல் சார்ந்த த்ரில்லர் களத்துக்கான நியாயமும் இல்லாமல் தடுமாறியிருக்கிறது படம்.

பொம்மை விமர்சனம்

வெறும் இரண்டு கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு நகரும் திரைக்கதையில் அத்தனை செயற்கைத்தனம். அடுத்த காட்சி என்ன என்பது சுலபமாக யூகிக்கக் கூடிய ஒன்றாகவே இருக்கிறது. இதனாலேயே நாயகன் தூக்கிக் கொண்டு ஓடும் பொம்மையைப் போல நாமும் கதையின் ஓட்டத்தில் சிக்கிக் கொண்டு பாடுபட வேண்டியதாயிருக்கிறது.

கொலைக்கான போலீஸ் விசாரணை எல்லாம் எதோ பெட்டி கேஸ் விசாரணை போலவே நடக்கிறது. ‘மொபைல் வீட்டிலிருந்ததால், ஆளும் வீட்டில்தான் இருந்திருப்பார்’ என்று ஒரு காவல் அதிகாரி நினைத்துக் கொள்வதெல்லாம் போங்காட்டம் இன்றி வேறில்லை. வசனங்களும் அதீத அவுட்டேடட் உணர்வையே தருகின்றன. “ரெண்டு கால் இல்லாதவன கூட பார்த்திருக்கேன். ஆனா அவுட்கோயிங் கால் இல்லாதவன பார்த்ததே இல்ல” என்று அதே காவல் அதிகாரி சொல்வது ஒரு சாம்பிள்.

காதல் கதை என்பதால் காதல் வசனங்களுக்காவது கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். ஆனால், அதுவும் செயற்கை தனத்தின் உச்சம். சமகால காதலுக்கும் டிரெண்டுக்கும் கொஞ்சமும் தொடர்பில்லாமல் இன்னமும் மழை, மொட்டை மாடி, நிலவு, பட்டாம்பூச்சி, முதல் முத்தம் என்று எழுதிக் கொண்டிருப்பது 80ஸ், 90ஸ் படங்களையே நினைவுபடுத்துகின்றன.

பொம்மை விமர்சனம்

குறிப்பாக நாயகி “ராஜகுமாரா” என்று மீண்டும் மீண்டும் அன்பாக அழைப்பது அயர்ச்சியையும் எரிச்சலையுமே உண்டாக்குகிறது. இதே படத்தில் தமிழ் சினிமாவின் வசனங்களையும், கதைக்கருவினையும் கேலி செய்து சில வசனங்கள் வைக்கப்பட்டுள்ளது நகைமுரண்.

யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை, மற்ற வீரர்கள் சொற்பமாக ஆட்டமிழக்கத் தனியாக நின்று ஆறுதலாக சில ரன்கள் அடித்த உணர்வினையே தருகிறது. பாடல்களில் ‘தெய்வீக ராகம்’ என்று குழந்தையின் குரலில் வரும் ரீமிக்ஸ் பாடலைத் தவிர மற்ற எதுவும் ஈர்க்கவில்லை.

ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு வண்ணமயமாக இருந்தாலும் எதுவுமே குறிப்பிட்டுச் சொல்லும்படி ஈர்க்கவில்லை. படத்தொகுப்பாளர் ஆண்டனி கத்தரிக்க வேண்டிய காட்சிகள் இன்னும் ஏராளமாக இருப்பதாகவே தோன்றுகிறது. துணிக்கடை பொம்மைகள் தயாரிக்கப்படும் கம்பெனியைக் காட்டிய விதத்திலும், படம் முழுக்க வரும் பொம்மையின் வடிவமைப்பிலும் கலை இயக்குநர் கே.கதிர் தனக்கான பணியைச் சிறப்பாகச் செய்துள்ளார்.

பொம்மை விமர்சனம்

வித்தியாசமான கதைக்கருவை எடுத்துக்கொண்ட படமாக இருந்தாலும், ஒரு காட்சிக்கூட அந்த சுவாரஸ்யத்தைக் கடத்தும்படியாக எடுக்கப்படவில்லை. இறுதியில் “A fascinating love story” என்று ஒரு கதாபாத்திரம் பேசும் வசனம் வருகிறது. ‘அப்போ அவர் பார்த்த படத்தை எங்களுக்கு எப்ப போட்டுக் காட்டுவீங்க’ என்றே கேட்கத் தோன்றுகிறது.

மொத்தத்தில் `கீ’ கொடுக்காத பொம்மையாக நம்மை எந்த இடத்திலும் ஈர்க்காமல் முடிந்து போகிறது இந்த `பொம்மை’ படம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.