போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி: ‘குண்டர் சட்டம் பாயும்’ என எச்சரித்த ஆட்சியர் – என்ன நடந்தது?

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே உள்ள தென்னிலை முதல் கூனம்பட்டி கரைத்தோட்டம் வரை உயர்மின் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தென்னிலை பகுதியைச் சேர்ந்த விவசாயி ராஜா, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

கடந்த மாதம் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டார். இந்த நிலையில், கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசிய ராஜாவிடம், மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், “அரசின் கொள்கை முடிவாக உள்ள இந்த திட்டத்திற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்காதபோது, நீங்கள் ஒருவர் மட்டும் போராட்டத்தில் ஈடுபடுகிறீர்கள். விவசாயி என்ற போர்வையில் நீங்கள் பல்வேறு பிரச்னைகளை செய்து வருகிறீர்கள். வருவாய்த் துறையில் பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் தலையிடுவதாக பொதுமக்களிடமிருந்து உங்கள் மீது புகார் வருகிறது. அதிகாரிகளை மிரட்டுவதாகவும் சொல்கிறார்கள்.

உண்ணாவிரதம் இருந்த ராஜா

அந்த புகார்களின் பெயரில் உங்களை குண்டர் சட்டத்தில் கைதுசெய்து நடவடிக்கை மேற்கொள்ள முடியும். ஒழுங்காக செயல்பட்டால், உங்களுக்கு மரியாதை” என்று பேசியதாக கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியருடனான இந்த உரையாடலை ஆடியோவாக பதிவு செய்த விவசாயி ராஜா, அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகச் சொல்லப்படுகிறது. இதற்கிடையில், போனில் பேசிக்கொண்டிருக்கும்போதே, தான் பேசும் செல்போன் உரையாடலை ராஜா தனது செல்போனில் மறுபுறம் பதிவு செய்வதை தெரிந்து கொண்ட மாவட்ட ஆட்சியர், “புகார்களின் பேரில் தங்கள் மீது குண்டர் சட்டம் மூலம் கைதுசெய்ய எனக்கு அதிகாரம் இருக்கிறது. ஆடியோவை பதிவேற்றுவதால், கவலை இல்லை” என்றும் ஆட்சியர் பேசியிருப்பது, அந்த ஆடியோவில் பதிவாகியிருக்கிறது.

இது குறித்து, விவசாயி ராஜாவிடம் பேசினோம். “எனக்குச் சொந்த ஊர் க.பரமத்தி அருகில் உள்ள கூனம்பட்டி கரைத்தோட்டம். எனக்குச் சொந்தமான 20 ஏக்கர் நிலத்துக்கு மேலே உயர்மின் கோபுரம் அமைக்க நினைக்குறாங்க. அந்த 20 ஏக்கர் நிலத்தில் 3 போர்கள், 1 கிணறு இருக்கிறது. உயர்மின் கோபுரம் அமைக்கப்பட்டால், டோட்டல் விவசாயமும் பாதிக்கப்படும். அதனால்தான், இதை நான் கடுமையாக எதிர்த்தேன். கடந்த மாதம், 11-ம் தேதி இந்த திட்டத்தை மாற்றுவழியில் கொண்டு செல்ல வலியுறுத்தி, தொடர் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினேன். 6 நாள்கள் உண்ணாவிரதம் இருந்தநிலையில், அதிகாரிகள் உத்தரவாதம் கொடுத்ததைத் தொடர்ந்து உண்ணாவிரதத்தை தற்காலிகமாக கைவிட்டேன். இந்த நிலையில், கடந்த மாதம் 22-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தினார்கள்.

இந்தத் திட்டம் சம்பந்தமாக, திட்ட வரைப்படம் உள்ளிட்ட 14 வகையான ஆவணங்களை கேட்டிருந்தோம். ஆனால், அதை தரவில்லை. மாறாக, கடந்த 12-ம் தேதி எங்க இடத்தில் அதிகாரிகள் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணியைத் தொடங்கிவிட்டார்கள். ஆனால், ஆட்சியரும், மின்சார வாரியமும் கொடுத்த உத்தரவில், 446 எண்ணுடைய சர்வே எண்ணில் உள்ள நிலத்தில்தான் உயர்மின் கோபுரம் அமைக்கப் போவதாக குறிப்பிட்டிருந்தார்கள்.

உண்ணாவிரதம் இருந்த ராஜா

ஆனால், மாறாக என்னுடைய நிலம் இருக்கும் 445/1 என்ற சர்வே எண்ணில் வரும் நிலத்தில் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணியைத் தொடங்கினார்கள். நான் எதிர்ப்பு தெரிவித்தேன். உடனே என்னையும், மற்ற விவசாயிகளையும் கைதுசெய்து, மண்டபத்தில் அடைத்து வைத்தனர். என் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துபோக கூட என்னை விடவில்லை. இந்நிலையில்தான், 13 – ம் இந்த விவகாரம் குறித்து பேச, மாவட்ட ஆட்சியரை போனில் அழைத்தபோது, ‘உங்களை குண்டர் சட்டத்தில் அடைப்பேன்’ என்று பேசி, அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

உடனே, இந்த விவகாரத்தை தலைமைச் செயலாளர், சம்பந்தப்பட்ட துறை உயரதிகாரிகள், சி.எம் செல் என்று பலருக்கும் அனுப்பினோம். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லாததால், மாவட்ட ஆட்சியர் என்னை மிரட்டும்விதமாக பேசிய வீடியோவை, விவசாய சங்கத் தலைவர்கள் சமூகவலைதளங்களில் வெளியிட்டார்கள். தொடர்ந்து, சட்டப்போராட்டம் நடத்த இருக்கிறோம்” என்றார்.

இது குறித்து, கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கரிடம் பேசினோம். “அந்த ஆடியோ விவகாரம் குறித்து எனக்கு எந்த பயமும் இல்லை. க.பரமத்தி பகுதியில் எல்லோருக்கும் தெரிந்த ஒரு மோசடி பேர்வழி ராஜா. அவர் அரசு அதிகாரிகளை மிரட்டி பணம் பறிப்பது, அங்குள்ள நிறுவனங்களை மிரட்டி பணம் கேட்பது என்று தவறான வழியில் செயல்படுபவர். அதற்கு, விவசாயி என்பதை போர்வையாக வைத்திருக்கிறார். அவர்மீது இரண்டு வழக்குகள் உள்ளன. சிமென்ட் நிறுவனம் ஒன்றை மிரட்டியதாக அவர்மீது வழக்கு பதியப்பட இருக்கிறது.

பிரபுசங்கர் (கரூர் மாவட்ட ஆட்சியர்)

இப்போது, மொத்தம் 48 இடங்களில் உயர் மின்கோபுரம் அமைக்கப்பட இருக்கும் நிலையில், அவற்றில் 7 இடங்களில் மட்டும் அமையவிடாமல் ராஜா பிரச்னை செய்கிறார். சட்டத்துக்கு புறம்பான விசயங்களில் ஈடுபடுகிறார். நான் ஆடியோவில் பேசியதுபோல், அவர் குண்டர் சட்டத்துக்கு உரிய நபர்தான். அந்த ஆடியோ பதிவிலேயே, அவர் போன் ரெக்கார்ட் செய்வதை தெரிந்துகொண்ட நான் அதுகுறித்து பணிவாகதான் அவரை எச்சரித்தேன். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார் அதிரடியாக.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.