மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்கும் முயற்சியில் தேசிய அளவில் பல்வேறு கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
காங்கிரஸ் கட்சி தனது பழைய வலிமையை இழந்துள்ள நிலையில் பாஜகவை எதிர்க்கும் பிராந்திய கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தே வெற்றி பெற முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. மூன்றாவது அணி என்று கட்சிகள் பிரிந்தால் அது பாஜகவுக்கு சாதகமாக அமையும்.
எதிர்கட்சிகள் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைய வேண்டும் என்பதற்காக பீகார் தலைநகர் பாட்னாவில் ஜூன் 23ஆம் தேதி எதிர்கட்சிகளின் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள , தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன் கார்கே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ராகுல் காந்தி, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், உத்தவ் பாலாசாகேப் தாக்கரே கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிபிஐ தேசிய செயலாளர் டி. ராஜா, சிபிஎம் தலைவர் சீதாராம் யெச்சூரி, சிபிஐ- எம்எல் திபாங்கர் பட்டாச்சார்யா உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து வலிமைப்பெற்றுவிடக்கூடாது என்பதில் பாஜக அரசு எச்சரிக்கையாக உள்ளது. அதற்கு நேரம் கொடுத்துவிடக்கூடாது என்பதற்காக அடுத்த ஆண்டு மே மாதம் வரை காத்திராமல் அதற்கு முன்பாகவே மக்களவைத் தேர்தலை நடத்த திட்டமிட்டு வருவதாக பீகார் முதல்வர் நிதீஷ் குமார் கூறியுள்ளார்.
பாஜக பக்கம் நகர்வாரா செந்தில் பாலாஜி? அடி மேல் அடி.. அடுத்து என்ன நடக்கும்?
பாட்னாவில் புதிய அமைச்சர் ரத்னேஷ் சதா பதவியேற்பு விழாவில் பங்கேற்ற நிதிஷ் குமார் அளித்த பேட்டியில், “மக்களவை தேர்தல் முன்கூட்டியே நடக்கும் என நான் கூறியது வேடிக்கையாக இருக்கலாம், ஆனால் அதற்கு நிறையவே சாத்தியங்கள் உள்ளன.
எதிர்க்கட்சிகள் இடையே இப்போது ஒற்றுமை ஏற்படும் வேகம் அதிகரித்துள்ளது. பாஜவை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள் பெரும்பாலும் வரும் 23ஆம் தேதி நடக்கும் மாநாட்டில் பங்கேற்க உள்ளன. இது தங்களுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என ஆளும் பாஜக அச்சம் கொள்ள வாய்ப்புண்டு. அந்த அச்சம் காரணமாக மக்களவை தேர்தல் முன்கூட்டியே நடத்தப்பட வாய்ப்புள்ளது” என்றார்.