வலி வடக்கு காணி அளவீடு தொடர்பில் மக்கள் பரபரப்படைய தேவையில்லை. – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு

வலி வடக்கில் உள்ள தனியார் காணிகளை சட்ட ரீதியாக மக்களிடம் கையளிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படவுள்ள காணி அளவீடுகள் தொடர்பில் மக்கள் பரபரப்படையத் தேவையில்லை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நேற்று (16.06.2023) நடைபெற்ற கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டு தொடக்க விழாவின் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு நூற்றாண்டுச் சின்னத்தினை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், “2013 ஆண்டு இராணுவத்தினரின் பயன்பாட்டிற்காக அரசுடமையாக்கும் நோக்கில் வர்த்தமானி வெளியிடப்பட்ட சுமார் 6300 ஏக்கர் காணிகளில் கணிசமானவை தற்போது விடுவிக்கப்பட்டு காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

எனினும், குறித்த காணிகள் சட்ட ரீதியாக அரச காணிகளாகவே இப்போதும் காணப்படுகின்றமையினால், 2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சட்ட வர்த்தமானியை மீளப் பெறுகின்ற வகையில் புதிய வர்த்தமானி வெளியிட வேண்டியிருக்கின்றது.

இதுதொடர்பாக, அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் விரிவாக கலந்துரையாடிய நிலையில், 2013 வர்த்தமானியை மீளப்பெறுவதற்கும், தற்போதும் விடுவிக்கப்படாமல் இருக்கின்ற காணிகளில் முடிந்தளவு காணிகளை விடுவிப்பதற்கும் காணி அளவீடுகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே காணி அளவீடுகள் மேற்கொள்ளப்படும் போது மக்கள் பரபரப்படையத் தேவையில்லை.

அதேபோன்று, போதைப் பொருள் பாவனை மற்றும் சமூகச் சீர்கேடுகள் எங்களுடைய சமூகத்தில் அச்சுறுத்தும் விவகாரமாக மாறியிருக்கின்றது. இதிலிருந்து எமது சமூகத்தை பாதுகாக்க வேண்டிய பாரிய சமூகக் கடமை எங்கள் எல்லோருக்கும் இருக்கின்றது.

இதுதொடர்பான விசேட கலந்துரையாடல் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்றிருந்தது. குறித்த கலந்துரையாடலில் எமது சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். அவ்வாறு கருத்து வெளியிட்டவர்களில் பெரும்பாலானவர்கள் எமது பிரதேசத்தில் புனர்வாழ்வு மையம் ஒன்றினை அவசியத்தினை வலியுறுத்தி இருந்தனர். என்னுடைய நிலைப்பாடும் அதுவாகவே இருக்கின்ற நிலையில், குறித்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளேன்.

இந்நிலையில், இங்கு கூடியிருக்கின்ற ஆசிரிய மாணவர்களும் ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புகின்றேன். அதாவது நீங்கள் எல்லோரும் கற்றல் கற்பித்தல் என்பதற்கு அப்பால், எமது சமூகத்தை அரோக்கியமாக முன்கொண்டு செல்வதற்கான விழிப்புணர்வு மற்றும் தெளிவூட்டல் முமற்சாகளிலும் ஈடுபட வேண்டும் ” என்று தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.