சென்னை: விஜய்யின் இன்றைய பேச்சு வரவேற்புக்குரியது என்று இயக்குநர் கரு பழனியப்பன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சென்னையை அடுதத நீலாங்கரை பகுதியில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை பாராட்டினார்.
இந்த விழாவில், பிளஸ் 2 தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண் எடுத்த திண்டுக்கல் மாணவி நந்தினிக்கு தளபதி விஜய் வைர நெக்லசை பரிசாக கொடுத்தார்.
விஜய் அரசியல் வருகை: விஜய் மக்கள் இயக்கத்தின் சமீபகாலச் செயல்பாடுகள் அனைத்தும், விஜய் விரைவில் அரசியலில் இறங்கப்போகிறார் என்பதை உறுதிசெய்வதாக இருந்தன. அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தமிழ்நாடு முழுவதும் தொகுதிவாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளை நேரில் அழைத்து சான்றிதழ், ஊக்கத்தொகையை நடிகர் விஜய் வழங்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது.
விஜய் பேச்சு: இந்த விழாவில் விஜய் தனது அரசியல் வருகை குறித்து அறிவிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது அவரது அரசியல் வருகையை அவரது ரசிகர்கள் மற்றும் விசுவாசிகள் தீவிரமாக எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், இன்று நடைபெற்ற விழாவில் நடிகர் விஜய் மாணவ மாணவியர் எளிதாக புரிந்து கொள்ளும் படி அழகாக பேசினார்.
அம்பேத்கர் பெரியார்: அனைத்து தலைவர்களையும் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அம்பேத்கர், பெரியார், காமராஜர் ஆகியோரைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்ளுங்கள், தேவை இல்லாத விஷயங்களை விட்டுவிடுங்கள் என்றார்.
காசுக்கு ஓட்டு: தொடர்ந்து பேசிய விஜய், நீங்கள் தான் நாளைய வாக்காளர்கள். அடுத்து புதிதாக நல்ல தலைவர்களை நீங்கள் தான் தேர்ந்தெடுக்க போகிறீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். நம்ம விரலை வைத்து நம்ப கண்ணையே குத்தி கொள்வது என்கிற என்ற ஒரு விஷயத்தை கேள்வி பட்டு இருக்கீங்களா? அதை தான் இப்போ நாம செஞ்சுக்கிட்டு இருக்கோம்.காசு வாங்கி கொண்டு ஓட்டு போட்டு கொண்டு இருக்கிறோம். ஒருவர் 15 கோடி செலவு செய்கிறார் என்றால் அதற்கு முன் அவர் எவ்வளவு சம்பாதித்து இருப்பார் என்பதை யோசித்து பார்க்க வேண்டும் என்றார். விஜய்யின் இந்த தெளிவான பேச்சை பலரும் பாராட்டி வருகின்றனர்.
பாராட்டுக்குரியது: இந்நிலையில் இயக்குநரும் நடிகருமான கரு பழனியப்பன் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய்யின் பேச்சு பாராட்டி உள்ளார். அதில், ஆன்மிக அரசியல் என்று சொல்லாமல், அம்பேத்கர் பெரியார் காமராஜரை படியுங்கள் என்று கூறியிருக்கிறார். அதைப்படித்தாலே அவர்கள் சரியாக வாக்களித்து விடுவார்கள். நன்றி என பதிவிட்டுள்ளார்.