சென்னை: விஜய் அண்ணாவை பார்த்ததும் அழுதுவிட்டேன் என்று மாற்றுத்தினாளி மாணவி பேட்டியில் நெகிழ்ந்து பேசி உள்ளார்.
தமிழ்நாட்டில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சி சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.
சாதனை படைத்த மாணவர்கள்: 234 தொகுதிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த சுமார் 1500 மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்காக அந்த இடம் அரசியல் காட்சி மாநாடு நடைபெறும் இடம் போல மேடை பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த மாற்றுதிறனாளி மாணவர்களுடன் அமர்ந்து நிகழ்ச்சியை தொடங்கினார்.
அழுதுவிட்டேன்: இந்த நிகழ்ச்சியில் 557 மதிப்பெண் பெற்ற மாற்றுத்திறனாளி மாணவி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது விஜய் அண்ணாவை பார்த்ததும் நான் அழுதேவிட்டேன், அவர் என் அருகில் அமர்ந்து இருந்தார். அவரை பார்த்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றார். மேலும், ஆறாம் வகுப்பு வரை பள்ளிக்கு சென்று படித்தேன். அதன்பிறகு என்னால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. ஸ்பெஷல் டீச்சர் வந்து எனக்கு சொல்லி கொடுத்தார்கள் என்றார்.
நெகிழ்ந்த பெற்றோர்: இதையடுத்து பேசிய மாற்றுத்திறனாளி மாணவியின் அம்மா, என் மகள் 6 மாத குழந்தையாக இருக்கும் போதே இந்த நோயால் பாதிக்கப்பட்டல், அவள் இரவு பகல் பார்க்காமல் படித்து இந்த மதிப்பெண் எடுத்து இருக்கிறார். கோவை வரை தெரிந்த என் மகளின் பெருமை இன்று விஜய்யால் உலகம் முழுவதும் தெரிகிறது என்றால் அதற்கு காரணம் விஜய்தான் என்று நெகிழ்ந்து பேசினார்.
மாணவர்களுக்கு விருந்து: இந்த விழாவில் கலந்து கொள்ள வந்த மாணவர்களுக்கு மதிய உணவாக ஜம்ஜம் சுவீட், மாங்காய் ஊறுகாய், இஞ்சி புளி துவையல் புதினா, ஆனியன் வெள்ளேரி தயிர்பச்சடி, கதம்ப பருப்பு பொரியல், உருளை பட்டாணி வருவல், சவ்சவ் கூட்டு, காளிஃபிளவர் பகோடா, வெஜ்புலவு, கத்திரிக்காய் காரகுழம்பு, மாங்காய், முருங்கை கதம்ப சாம்பார், தக்காளி ரசம், ஆனியன் வடை, அப்பளம், அடபிரதம பாயாசம், மோர் உள்ளிட்ட உணவு பறிமாறப்பட்டது.