விருதுநகர் : பெட்டிக்கடையில் திருட்டுத்தனமாக மது விற்பனை – போலீசாரை தாக்கி விட்டு தப்பியோடிய தம்பதியினர்.!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் கிராமத்தில் மாசானம் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் சுருளி. இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார்.
இவரது, கடையில் தினமும் மதுபானக் கடை திறப்பதற்கு முன்பே திருட்டுத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு ஆய்வு செய்ய சென்றனர்.
அப்போது, அந்த பெட்டிக்கடையின் முன்னாள் இருசக்கர வாகனத்தில் வைத்து மது பாட்டில்களை சுருளியின் மனைவி தெய்வத்தாய் விற்பனை செய்து கொண்டிருந்தார். இதைப் பார்த்த போலீசார், கணவன், மனைவி இருவரையும் பிடித்து விசாரணை செய்தனர்.
அந்த நேரத்தில், சுருளியும் மனைவி தெய்வத்தாயும் சேர்ந்து போலீசாரைச் சரமாரியாகத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டனர். இதில், படுகாயமடைந்த போலீசாரை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சுருளி, அவரது மனைவி தெய்வத்தாய் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய இருவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதற்கிடையே சுருளி மற்றும் தெய்வத்தாய் கடையில் இருந்து 36 மது பாட்டில்கள், விற்பனைக்காக பயன்படுத்திய இருசக்கர வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.