கம்பாலா-உகாண்டாவில் பள்ளி வளாகத்தில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில், 38 மாணவர்கள் உட்பட 41 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிழக்கு ஆப்ரிக்க நாடான உகாண்டாவின் எல்லை நகரமான போண்ட்வேவில் உள்ள பள்ளியில், ஜனநாயகப் படையைச் சேர்ந்த ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்கள் நுழைந்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர்.
இதில், 38 மாணவர்கள் உட்பட 41 பேரை சுட்டு, எரித்து கொன்றதுடன், ஆறு பேரை கடத்திச் சென்றனர்.
எட்டு பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். இவர்கள், அங்குள்ள மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து உகாண்டா போலீசார் கூறியதாவது:
பள்ளி வளாகத்தில் ஐந்து பேர் கும்பல் நடத்திய தாக்குதலில், 38 மாணவர்கள், பள்ளி காவலாளி, உள்ளூர் மக்கள் இருவர் என மொத்தம் 41 பேர் பலியாகினர்.
சிலர் துப்பாக்கிச் சூட்டிலும், சிலர் தீவைத்து எரிக்கப்பட்டதிலும் இறந்துள்ளனர். இதற்கு காரணமானவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கடத்தப்பட்ட ஆறு பேரையும் மீட்கும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement