சென்னை:
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண் எடுத்த மாணவி நந்தினிகக்கு வைர நெக்லஸ் கொடுத்து கவுரவித்த நடிகர் விஜய், நீட் தேர்வில் 720-க்கு 720 மதிப்பெண்கள் விடுவித்த மாணவன் பிரபஞ்சனை கண்டுகொள்ளாமல் விட்டது ஏன்? என பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் இன்று ரொக்கப் பரிசு வழங்கி கவுரவித்தார். இதில் பன்னிரெண்டாம் வகுப்பில் 600-க்கு 600 மதிப்பெண் எடுத்த திண்டுக்கல் மாணவிக்கு விஜய் வைர நெக்லஸ் பரிசளித்தார். தற்போது இதுதான் பல்வேறு விமர்சனங்களையும், வியூகங்களையும் கிளப்பியுள்ளது.
அதாவது, பன்னிரெண்டாம் வகுப்பில் முழு மதிப்பெண் எடுத்த நந்தினியை கவுரவித்த நடிகர் விஜய், நீட் தேர்வில் முழு மதிப்பெண்ணான 720-க்கு 720-ஐ பெற்ற மாணவன் பிரபஞ்சனை கவுரவிக்காமல் விட்டது ஏன் என பலரும் கேள்வியெழுப்பியுள்ளனர். பள்ளி பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தான் பரிசு என அறிவிக்கப்பட்டது எனக் கூறினாலும், நீட் தேர்வில் இந்திய அளவில் முதல் மதிப்பெண்ணை எடுத்து தமிழகத்துக்கே பெருமை சேர்த்தவர் பிரபஞ்சன்.
மேலும், இந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்கு சில தினங்களுக்கு முன்பே நீட் தேர்வு முடிவுகளும் வெளியானது. அப்போதே விஜய் நினைத்திருந்தால் பிரபஞ்சனை அழைக்குமாறு தனது விஜய் மக்கள் இயக்கத்தினரிடம் கூறியிருக்கலாம். ஆனால், விஜய் அவ்வாறு செய்யவில்லை. தனது நீட் தேர்வு எதிர்ப்பு நிலைப்பாட்டை பொதுவெளியில் தெரியப்படுத்துவதற்காகவே விஜய் இவ்வாறு செய்திருப்பதாக விஜய் மக்கள் இயக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.