புதுடில்லி:டில்லி மேம்பாட்டு ஆணைய கோரிக்கைகளை, டில்லி நீர்வளத்துறை அமைச்சகம் கிடப்பில் போட்டுள்ளது என, டி.டி.ஏ., அதிகாரிகள் கூறினர்.
இதுகுறித்து, டில்லி மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 2013ம் ஆண்டு முதல் கல்காஜி பூமிஹீன் முகாமிலும், 2017 முதல் ஜெய்லர்வாலா பாக் பகுதியிலும் தண்ணீர் வினியோக குழாய்கள் மற்றும் கழிவுநீர்க் குழாய்கள் அமைக்க திட்ட அறிக்கைகள் அனுப்பி வைக்கப்பட்டன.
ஆனால், அந்தக் கோரிக்கைகள் டில்லி நீர்வளத் துறையில் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், நவீன அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மாற்றப்பட்ட பூமிஹீன் முகாமில் இருந்து ஆயிரக்கணக்கான குடிசைவாசிகள் கடும் தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொள்கின்றனர்.
அவர்களுக்கு டேங்கர் லாரிகள் வாயிலாக டில்லி மேம்பாட்டு ஆணையம் தண்ணீர் சப்ளை செய்கிறது.
டில்லி மேம்பாட்டு ஆணைய தலைவரும், துணை நிலை கவர்னருமான சக்சேனா தலைமையில், கடந்த 14ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
அதில், டில்லி ஜல் போர்டு துணைத் தலைவரும், ஆளுங்கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,வுமான சோம்நாத் பாரதியும் பங்கேற்றார். அப்போது, கிடப்பில் கிடக்கும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கவர்னருக்கு கடிதம்
புதுடில்லி துணை நிலை கவர்னர் கவர்னர் சக்சேனாவுக்கு, டில்லி நீர்வளத் துறை அமைச்சர் சவுரப் பரத்வாஜ் எழுதியுள்ள கடிதம்: டில்லியில் ஏரிகளை புனரமைத்தல் மற்றும் டில்லி மேம்பாட்டு ஆணைய நிலத்தில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க அனுமதிக்க வேண்டும். தலைநகர் டில்லியில் ஒரு நாளைக்கு 300 மில்லியன் கேலன் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது, யமுனை மற்றும் கங்கை நதிகளில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்ய, டில்லி அரசு அண்டை மாநிலங்களான ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேச அரசுகளுடனும் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், இந்த முயற்சிகள் இதுவரை சாதகமான பலனைத் தரவில்லை.உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களில் இருந்து டில்லி மக்களுக்காக கூடுதல் தண்ணீரை வாங்க, கவர்னர் உதவி செய்ய வேண்டும்.மேலும், ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தல் மற்றும் பெரிய அளவிலான நிலத்தடி நீர்த் தேக்க திட்டத்தை டில்லி அரசு செயல்படுத்தியுள்ளது.டில்லியில் உள்ள ஏரிகள் மற்றும் நீர்நிலைகளை புனரமைக்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே 35 க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் புனரமைக்கப்பட்டுள்ளன.டில்லி மேம்பாட்டு ஆணையம் கோரிய 401 ஆழ்குழாய் கிணறுகளின் புனரமைக்கு 110 க்கு மட்டுமே கவர்னர் அனுமதி வழங்கியுள்ளார்.அதேபோல், 422 ஏரி மற்றும் நீர்நிலை புனரமைப்பு திட்டங்களில் 61க்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கவர்னர் அலுவலகத்தில் அனுமதிக்காக இந்தத் திட்டங்கள் கிடப்பில் இருப்பதால், டில்லியின் தண்ணீர் வினியோகத்தை அதிகரிக்க டில்லி நீர்வளத்துறை செயல்பாடுகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஆழ்குழாய் கிணறுகள், ஏரிகள் மற்றும் நீர்நிலைகளை புனரமைக்க தேவையான தடையில்லா சான்றிதழ்களை டில்லி மேம்பாட்டு ஆணையத் தலைவராகவும் பதவி வகிக்கும் கவர்னர் அனுமதி வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்