அதிமுக யாருக்கும் அடிமை இல்லை; திமுகதான் காங்கிரஸுக்கு அடிமையாக இருக்கிறது: இபிஎஸ் குற்றச்சாட்டு

சேலம்: “1999-ல் மத்தியில் பாஜக ஆட்சி நடந்துகொண்டிருந்தபோது, திமுகவைச் சேர்ந்த எம்.பி.,க்கள் அதில் அமைச்சர்களாக இடம்பெற்றார்களா? இல்லையா? காலத்துக்கு ஏற்றபடி தங்களுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளக்கூடிய ஒரே கட்சி திமுகதான். நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஞாயிற்றுக்கிழமை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தமிழகத்தில் மிகப்பெரிய பணியை நாங்கள் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். எனவே நாங்கள் யாருக்கும் அடிமை அல்ல. ஏன், இதே திமுக 1991ம் ஆண்டு பாஜகவுடன் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டதா? இல்லையா?

1999ல் மத்தியில் பாஜக ஆட்சி நடந்துகொண்டிருந்தபோது, திமுகவைச் சேர்ந்த எம்.பி.,க்கள் அதில் அமைச்சர்களாக இடம்பெற்றார்களா? இல்லையா? காலத்துக்கு ஏற்றபடி தங்களுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளக்கூடிய ஒரே கட்சி திமுகதான். ஆனால், நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை.

கூட்டணி என்பது எல்லா கட்சிகளுமே, அரசியல் சூழலுக்கும் தக்கவாறு அவ்வப்போது தேர்தல் வருகின்றபோது அமைக்கப்படுகிற ஒரு நிகழ்வு. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கிறது. அந்தக் கொள்கையின் அடிப்படையில்தான் அந்தக் கட்சி செயல்படும். அதிமுகவுக்கென்று கொள்கை இருக்கிறது. அந்தக் கொள்கையின் அடிப்படையில்தான் நாங்கள் கூட்டணி அமைத்துக் கொள்வோம்.

யாருக்கும் அதிமுக அடிமை இல்லை. ஆனால், திமுதான் அடிமையாக இருக்கிறது. எப்போது பார்த்தாலும், முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, எமர்ஜென்ஸியின் போது மிசாவைப் பார்த்தவர்கள் என்று கூறுகிறார். அப்போது யாருடைய ஆட்சி? காங்கிரஸ் கட்சியின் ஆட்சி. அந்த ஆட்சியில்தான் எமர்ஜென்ஸி கொண்டுவரப்பட்டது. அப்போதுதான் மிசாவும் கொண்டு வரப்பட்டது. அப்படியெல்லாம் பாதிக்கப்பட்டவர்கள், ஆட்சிக்கும், அதிகாரத்துக்கும், பதவிக்கும், முதல்வர் ஸ்டாலினும் அவரின் குடும்பமும் காங்கிரஸுக்கு அடிமையாக இருந்து கொண்டிருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 39, புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் அதிமுக நிர்வாகிகளின் விருப்பமாக உள்ளது. அதற்காக அரும்பணி ஆற்றிவருகிறோம். 40 இடங்களில் அதிமுக வெற்றி பெறுவதற்கான சூழல் பிரகாசமாக இருக்கிறது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.