அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை தமிழக முதல்வர் உருவாக்குகிறார்: பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம.சீனிவாசன்

மதுரை: தமிழகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை தமிழக முதல்வர் உருவாக்குகிறார் என்று பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம.சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் இன்று பாஜக ஊடகப்பிரிவு மதுரை பெருங்கோட்ட நிர்வாகிகள் கூட்டம் மாநிலச் செயலாளர் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம.சீனிவாசன் சிறப்புரை ஆற்றினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”தமிழகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவாக்கிக்கொண்டிருக்கிறார். திமுக தொடர்ந்து மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. செந்தில்பாலாஜி மீது சோதனை நடத்தினால் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது திமுக அரசின் பொறுப்பு. அமலாக்கத்துறை சோதனை என்பது செந்தில்பாலாஜி எந்தளவுக்கு ஊழல் செய்துள்ளார் என்பதையும் வெளிப்படுத்தும். அவர் தவறு செய்யவில்லை என்றால் எந்தளவுக்கு நேர்மையானவர் என்பதையும் இந்த உலகுக்கு அறிவிக்கும். பிறகு ஏன் சோதனைக்கு பயப்படவேண்டும். முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியதுதானே.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை விமானநிலையத்தில் இறங்கும்போது மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக ஆட்சியில் கருத்து சுதந்திரம் முழுமையாக நசுக்கப்படுகிறது. பிரதமரை அவதூறு பேசி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டால் எந்த வழக்கும் பதிவது கிடையாது. ஆனால் முதலமைச்சரை பற்றி தெரியாமல் பதிவிட்டால்கூட உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். சிறையில் அடைக்கப்படுபவர்கள் எல்லாம் பாஜகவினராகவும், அவதூறு பேசுபவர்கள் எல்லாம் திமுகவினர் இருக்கின்றனர். திமுக அரசு பாரபட்சமின்றி நடந்து கொள்ளவேண்டும். மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் தமிழகத்துக்கு நிறைய பலன் கிடைக்கும்.

தமிழ் மக்கள் மீது அதிக அன்பு கொண்ட ஒரு பிரதமர் மோடி நமக்கு கிடைத்திருக்கிறார். அதைப்பயன்படுத்தி வளர்ச்சி பெற வேண்டும். புதிய நாடாளுமன்றத்தில் ஒலித்த முதல் மொழி தமிழ் மொழி. அதில் பங்கேற்காமல் திமுக புறக்கணிக்கிறது. திமுக மத்திய அரசுடன் நிழல் யுத்தம் நடத்தி கொண்டிருக்கின்றனர். பாஜகவும், திமுகவும் ஒன்றுக்கொன்று எதிர்க்கட்சிகள்தான். ஆனால் மத்திய அரசும், மாநில அரசும் எதிர்க்கட்சிகள் கிடையாது. இந்த வித்தியாசத்தை தமிழக முதல்வர் புரிந்து கொள்ள வேண்டும்.

கட்சிகள் எதிரும், புதிருமாக இருக்கலாம், ஆட்சி என்று வரும்போது இணக்கமாக இருக்க வேண்டும். பிரதமர், முதல்வர்கள் சேர்ந்தது ‘டீம் இண்டியா’ என்கிறார். ஒரு குழுவாக இணைந்து தேசத்தை உயர்த்துவோம் என்று பிரதமர் சொல்கிறார். ஆனால் இங்கு பிரதமர் வேறு, முதலமைச்சர் வேறு என்கின்றனர். ஆளுநரை பற்றி திமுக பொதுவெளியில் கொச்சைப்படுத்துவது தமிழக வளர்ச்சிக்கு நல்லதல்ல. திமுகவிடம் இளைஞர்கள் கற்றுக்கொள்ள நல்ல அரசியல் பாடம் இல்லை. திமுக அரசாங்கத்துக்கும், கம்யூனிஸ்ட்டுகளுக்கு சகிப்புத்தன்மை வேண்டும்.” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.