ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதரா பாத்தில் விமானத்துறை பயிற்சி நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். அப்போது நாட்டின் பாதுகாப்புத் துறையின் வளர்ச்சி குறித்தும், நவீன தொழில்நுட்பங்களின் முக்கியத்தும் குறித்தும் அவர் பேசினார்.
“இந்திய பாதுகாப்புத் துறை இந்திய நில எல்லையையும், கடல் எல்லையையும், வான் பரப்பையும் பாதுகாத்து வருகிறது. தற்போது ராணுவம் தொடர்பாக புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி வருகின்றன. நவீன பாதுகாப்புக் கட்டமைப்புக்கு இந்தத் தொழில்நுட்பங்கள் இன்றியமையாதவை. இந்திய பாதுகாப்புத் துறை நவீனமாகி வருகிறது. ரபேல் விமானங்கள், சினுக் ரக ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப் படையை வலுப்படுத்தி வருகின்றன” என்று அவர் தெரிவித்தார்.
சீனாவுடன் எல்லைப் பிரச்சினை தொடர்ந்து வருகிற நிலையில், இந்தியா தன்னுடைய ராணுவக் கட்டமைப்பைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவுக்கு ராணுவத் தளவாடங்கள் ஏற்றுமதி செய்வதில் ரஷ்யா முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ரஷ்யாவுடன் தொடர்ந்து ராணுவத்தளவாட ஒப்பந்தம் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மேற்கத்திய நாடுகளிலிருந்து தளவாடங்கள் வாங்கும் வாய்ப்பை இந்தியா பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.