ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி, சடலத்தை பணிகள் நடைபெற்று வரும் மேம்பாலத்தில் புதைத்த நிலையில் ஒரு மாதத்திற்குப் பிறகு தஞ்சாவூர் மாவட்ட போலீஸார் சாலையை தோண்டி சடலத்தை கைப்பற்றினர்.
மனைவியின் தவறான தொடர்பை கண்டித்ததால் கொலை செய்யப்பட்டு மேம்பாலத்தின் சாலையில் புதைக்கப்பட்ட இவர் தான் தஞ்சாவூர் மாவட்டம் கீழ்மாந்தூரைச் சேர்ந்த பாரதி.
சென்னையில் தங்கியிருந்து டீக்கடையில் வேலைப்பார்த்து வந்த பாரதிக்கு திவ்யா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் கீழ்மாந்தூரில் வீட்டிலிருந்த திவ்யா அப்பகுதியில் விவசாய வேலைகளுக்குச் சென்று வந்துள்ளார். அப்போது, டேவிட் என்கிற சதீஷ்குமாரின் வயலுக்கு சென்ற போது ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் திருமணம் கடந்த உறவாக மாறியதாக கூறப்படுகிறது.
டேவிட்டிற்கு சில வாரங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையிலும், திவ்யா உடனான தொடர்பை கைவிடாமல் தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த மே மாதம் நடைபெற்ற கோயில் திருவிழாவிற்காக சென்னையிலிருந்து ஊர் திரும்பிய பாரதி திடீரென காணாமல் போனதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து, அவரது உறவினர் பந்தநல்லூர் காவல் நிலையத்தில் மே 24ம் தேதி புகார் அளித்தார்.
மனைவி இருக்கும் போது உறவினர் ஏன் புகார் அளித்தார் என்ற சந்தேகத்தில் போலீஸார் விசாரணையை துவங்கிய போது திவ்யாவுடன் டேவிட் செல்போனில் அதிகமாக பேசியிருப்பது தெரிய வந்தது. எனவே, சந்தேகத்தின் பேரில் தங்களது பாணியில் டேவிட்டிடம் விசாரணையை துவங்கிய போலீஸாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
திவ்வாயுடன் தனிமையில் இருந்ததை பார்த்து விட்ட பாரதி, இருவரையும் கடுமையாக எச்சரித்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. எனவே, திவ்யாவுடன் சேர்ந்து கட்டையால் பாரதியை தாக்கியதோடு கழுத்தை நெரித்து கொலை செய்ததாக போலீஸாரிடம் தெரிவித்தான் டேவிட். சடலத்தை எப்படி மறைப்பது என்பது தெரியாததால், தனது நண்பர்கள் சிலரிடம் வேறொரு கதையைக்கூறி ஐடியா கேட்டுள்ளான் டேவிட்.
தஞ்சாவூர்-விக்கிரவாண்டி சாலை விரிவாக்கத்திற்கு மண் கொட்டும் பணியின் கண்காணிப்பாளராக டேவிட், செயல்பட்டு வருவதால் பாபநாசம் படத்தில் வருவது போல கட்டுமானம் நடைபெறும் இடத்தில் சடலத்தை புதைக்க முடிவெடுத்துள்ளான்.
சடலத்தை பஞ்சு மூட்டை போல கட்டி திவ்யாவின் வீட்டில் வைத்து விட்டு மறுநாள் லோடு ஆட்டோவில் ஏற்றிச் சென்றான் டேவிட். பட்டம் குறுக்கு ரோடு பாலத்தின் மேல் பகுதியில் சுமார் 2 அடிக்கு குழி தோண்டி அங்கு சடலத்தை டேவிட் புதைத்ததாக கூறப்படுகிறது. சில நாட்களிலேயே அங்கு புதிய சாலையும் அமைக்கப்பட்டது.
திருவிடைமருதூர் டி.எஸ்.பி ஜாபர் சித்திக், தாசில்தார் சுசீலா முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலமாக சாலை உடைக்கப்பட்டு துணியால் சுற்றப்பட்டிருந்த சடலத்தை மீட்டனர். அழுகிய நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டதால் அதே இடத்தில் வைத்து மருத்துவர்கள் உடற்கூராய்வு செய்தனர்.
இதுதொடர்பாக திவ்யா மற்றும் டேவிட்டை போலீஸார் கைது செய்தனர். ஆண் நண்பருடன் கொண்ட மோகத்தால் மனைவியே கணவனை கொலை செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.