அமெரிக்காவின் ஜார்ஜியா பகுதியைச் சேர்ந்த ஜேசன் க்ராஃபோர்ட் என்பவர் தனது பேஸ்புக் அக்கௌன்ட் காரணமின்றி முடக்கப்பட்டதற்காகத் தொடர்ந்த வழக்கில், அவருக்கு 41 லட்ச ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க பேஸ்புக் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சாதாரணமாக ஜேசன் ஒரு ஞாயிற்றுக் கிழமையில் தன்னுடைய மொபைலை எடுத்து பேஸ்புக் அக்கௌன்ட்டை கிளிக் செய்கிறார். ஆனால், அவரின் கணக்கு முடக்கப்பட்டிருக்கிறது. அந்த பக்கத்தில் குழந்தை பாலியல் சுரண்டலுக்கு எதிராக விதிகளை மீறியதற்காக அக்கௌன்ட் முடக்கப்பட்டிருக்கிறது என காண்பித்துள்ளது.
தான் அப்படி ஏதும் போஸ்ட் போடவில்லையே என நினைத்தவர், பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவை தொடர்பு கொண்டு `என்ன, எங்கே தவறு நடந்தது’ எனக் கேட்க முயற்சி செய்திருக்கிறார். ஆனால், எந்த நபரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. மெயில் அனுப்பியும் பலனில்லை.
இந்த சமயத்தில் வேறு வழியின்றி 2022 ஆகஸ்ட் மாதம் பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்கிறார். எந்த ஒரு விதியும் மீறாத போதும், மீறியதாகக் கூறி தன்னுடைய அக்கௌன்ட் முடக்கப்பட்டிருப்பதாகவும், நிறுவனத்தின் அலட்சிய தன்மையையும் சுட்டிக் காட்டி வழக்குப் பதிவு செய்திருக்கிறார்.
நீதிமன்ற விசாரணையில், ஜேசன் தொழில்நுட்ப குழுவிற்கு மெயில் செய்தபோதும் பதில் அளிக்காமல் இருந்துள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டது. எனவே ஜேசனுக்கு பதிலளிக்காமல் இருந்ததால் 41 லட்ச ரூபாய் (50,000 அமெரிக்க டாலர்கள்) நஷ்ட ஈடாக வழங்க பேஸ்புக் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“அவர்கள் எனது பேஸ்புக் கணக்கை மீண்டும் ஆக்டிவேட் செய்துள்ளனர். மேலும் நான் ஓரளவு நியாயப்படுத்தப்பட்டதாக உணர்ந்தேன். நிதி ஆதாயத்திற்காக நான் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவில்லை; மாறாக அவர்களின் வெளிப்படை தன்மை மற்றும் பதிலளிக்க மறுத்ததற்கு பேஸ்புக் பொறுப்பேற்க வேண்டும் என்று நினைத்தேன்’’ என ஜேசன் தெரிவித்தார்.
`நான் சிவனேனு தான இருந்தேன். என்னோட அக்கௌன்ட்டை ஏன் ப்ளாக் பண்ணாங்க’ என்று கேட்ட அனுபவம் உங்களுக்கு உள்ளதா?