பட்டப்பகலில் இளைஞர் ஒருவரை, திமுக ஸ்டிக்கர் ஒட்டிய காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிய சம்பவம் காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் நடந்த நேற்று காலை சிவகங்கை மாவட்டம், காரைக்குடி காவல்நிலையத்தில் கையெழுத்திட வினீத் என்ற இளைஞரை வழிமறித்து, ஸ்கார்ப்பியோ காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் சராமரியாக வெட்டியது.
அப்போது, வினீத்தின் நண்பன் நீண்ட வாளை (ஆயுதம்) எடுத்து, அந்த கும்பலை விரட்ட முயல, அவரையும் அந்த கும்பல் தாக்கிவிட்டு தப்பியுள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்த இருவரையும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வினீத் உயிரிழக்க, அவரின் நண்பருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் குறித்து வெளியான முதல்கட்ட தகவலின்படி, 2 மாதங்களுக்கு முன்பு, காரைக்குடி பாப்பா ஊருணி நாச்சுழியேந்தல் பகுதியில் சொத்துக்காக கூலிப்படை மூலம் தாயே, மகனை கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மதுரை மாவட்டம், திருமோகூரைச் சேர்ந்த வினீத் (வயது 29) என்பவருக்கு, நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில், நீதிமன்ற நிபந்தனைப்படி, காரைக்குடி தெற்கு காவல்நிலையத்தில் கையெழுத்திட நண்பர்களுடன் காரைக்குடி வந்த வினீத்-யை மர்ம கும்பல் வெட்டி கொலை செய்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.