மதுபோதையில் தகராறு செய்த தந்தையை மகன் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள ஆத்தங்கரைபட்டி கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன் (வயது 46). கூலி தொழிலாளியான இவரது மனைவி வசந்தா (வயது 40). இந்த தம்பதியினருக்கு சூர்யா (வயது 21) என்ற மகன் இருந்துள்ளார். இதில் தந்தை குமரேசன் தினம் குடித்துவிட்டு மனைவி வசந்தாளிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் முடித்து விட்டு வந்த குமரேசன் மது போதையில் மனைவி வசந்தாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை மகன் சூர்யா தட்டிக் கேட்டுள்ளார். இதில் தந்தை குமரேசனுக்கும், மகன் சூர்யாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முக்கிய நிலையில் சூர்யா கட்டையை எடுத்து தனது தந்தையை கடுமையாக தாக்கியுள்ளார். அதன் பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டதில் சூர்யாவின் பலத்த தாக்குதலில் தந்தை குமரேசனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்துள்ளார்.
அதன் பின்னர் அருகில் இருந்தவர்கள் குமரேசனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வர வைத்தனர். ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த அரிமளம் போலீசார் சூர்யா மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.