சென்னை:
பாஜக நிர்வாகியும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்புவை ஆபாசமாக பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை போலீஸார் கைது செய்துள்ளனர். கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கிய அடுத்த நிமிடமே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திமுகவைச் சேர்ந்த பிரபல பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. இவரது பேச்சுகள் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி இருக்கிறது. அண்மையில் கூட ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதால் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். சில வாரங்களுக்கு முன்புதான் மீண்டும் அவர் திமுகவில் இணைந்தார்.
இதனிடையே, நேற்று நடந்த திமுக கூட்டத்தில் கலந்துகொண்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஆளுநர் ஆர்.என். ரவியை தரக்குறைவாக பேசினார். மேலும், பாஜக நிர்வாகி குஷ்புவையும் மிகவும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசினார். இவரது பேச்சு சமூக வலைதளங்களில் தீயாக பரவி பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இன்று செய்தியாளர்களை குஷ்பு சந்தித்தார். அப்போது அவர் மிகவும் ஆவேசமாகவும், கண்ணீர் விட்டபடியும் பேசினார். “பெண்களை கேவலமாக பேசுவவதை நிறுத்துங்க. இன்னைக்கு கொந்தளிச்சு போய் நான் இங்க உட்கார்ந்துட்டு இருக்கேன். நேராகவே முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சவால் விடுகிறேன். அந்த தைரியம் எனக்கு இருக்கு. உடனே சிலர் கேட்பாங்க.. ஏன் உங்க கட்சியில் யாரும் பெண்களை தரக்குறைவா பேசலையானு. யாராக இருந்தாலும், எந்தக் கட்சியாக இருந்தாலும் பெண்களை தவறாக பேசினால் நான் வந்து நிற்பேன்.
இன்னைக்கு நான் வலியோட உட்கார்ந்துட்டு இருக்கேன். இன்னைக்கு நான் இங்க வந்து பேசலைனா, என் மகள்களுக்கு எப்படி நான் முன்னுதராணமாக இருக்க முடியும்? ஒருத்தர் உன்னை பத்தி இப்படி பேசுறாரே.. நீ ஏன் அமைதியா இருந்தனு என் பொண்ணுங்க என்னை கேட்கக்கூடாது. ஒரு தாய்க்கு பொறந்தவன் தானே அவன். எப்படி அவன் என்னை இப்படி பேசலாம். அவனுக்கு புத்தி எங்க போச்சு” என குஷ்பு பேசினார்.
இந்நிலையில், குஷ்புவின் இந்த பேட்டி முடிந்த அடுத்த அரை மணிநேரத்திலேயே, பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கி திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் விடுத்துள்ள அறிக்கையில், “கட்சி விதிகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் புறம்பாக செயல்பட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சூழலில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அடுத்த நிமிடமே, கொடுங்கையூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.