புதுடெல்லி: சாலை பணிகளில் தரத்துக்கு முதலிடம் அளிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
துவாரகா எக்ஸ்பிரஸ் சாலை திட்டத்தில் டெல்லி, குருகிராம் பகுதிகளை இணைக்கும் வகையில் 29 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரங்புரியில் புதிய பாலம் கட்டப்படுகிறது. கடந்த 14-ம் தேதி பாலத்தின் ஒரு பகுதி இடிந்து அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஜேசிபி ஓட்டுநர் ஷகீல் உயிரிழந்தார். கடந்த சில மாதங்களாக தேசிய நெடுஞ்சாலை, எக்ஸ்பிரஸ் சாலைகளின் கட்டுமான பணிகளின்போது விபத்து அதிகரித்து வருகிறது.
இந்த சூழலில் உள்கட்டமைப்பு மேம்பாடு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் சாலை கட்டுமான விபத்துகள் குறித்த பிரச்சினை எழுப்பப்பட்டது. அப்போது மத்திய நெடுஞ்சாலை துறை, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூத்த அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டிப்பான உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
‘‘சாலை பணிகளில் தரத்துக்கு முதலிடம் அளிக்க வேண்டும். இதேபோல சாலை கட்டுமான பணியின் போது தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்’’ என்று அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார்.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது: சாலை கட்டுமான பணிகளின்போது ஏற்படும் விபத்துகளை தடுக்க அதிதீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தவறிழைக்கும் ஒப்பந்த நிறுவனங்கள் கருப்பு பட்டியலின் கீழ்கொண்டு வரப்படுகின்றன. இதன்மூலம் அந்த நிறுவனங்கள் மீண்டும் சாலை பணி ஒப்பந்தம் பெறுவது தடுக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
சாலை, பாலம் கட்டுமானப் பணியின்போது மிகுந்த கவனமாக செயல்பட வேண்டும். தரம், பாதுகாப்புக்கு முதலிடம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார். இந்த அறிவுரைகளை கண்டிப்புடன் பின்பற்றுவோம். இவ்வாறு நெடுஞ்சாலை ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.