“சிறுமியின் குடும்பம் மிரட்டப்பட்டது; அதனால்தான் புகார் திரும்பப் பெறப்பட்டது!" – சாக்ஷி மாலிக்

சாக்ஷி மாலிக், வினேஷ் போகத், பஜ்ரங் புனியா உள்ளிட்ட நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர்கள், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவரும் பா.ஜ.க எம்.பி-யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் மிரட்டல் விடுத்ததாக குற்றம்சாட்டினர். அதோடு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்கள் மே 28-ம் தேதி அன்று ஜந்தர் மந்தரிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

அதற்கு முன்னரே காங்கிரஸின் பிரியங்கா காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் போராட்ட இடத்துக்குச் சென்று ஆறுதல் தெரிவித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மல்யுத்த வீரர்களின் போராட்டம் மாதக்கணக்கில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

போராட்டத்தில் மல்யுத்த வீராங்கனைகள்

இந்த நிலையில், இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் பல பதக்கங்களை வென்று தந்த சாக்ஷி மாலிக்கும், அவர் கணவரும் மல்யுத்த வீரருமான சத்யவர்த் கடியனும் இணைந்து, நேற்று (17-6-23)  ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டனர். அதில் சத்யவர்த் பேசுகையில், “நாங்கள் முன்னெடுத்து நடத்திய போராட்டம் எந்த அரசியல் நோக்கத்துக்காகவும் இல்லை. மல்யுத்த வீரர்களுக்குள் ஒற்றுமை இல்லாததால்தான், இத்தனை ஆண்டுகளாகப் பல துன்புறுத்தல்கள் மற்றும் மிரட்டல்களைச் சந்தித்தும், எதிர்த்து குரல் கொடுக்கவில்லை. அதோடு இந்தப் போராட்டத்தைப் பற்றி   ஒரு பொய்யான கதைக் கட்டப்படுகிறது. அதை தெளிவுப்படுத்த வேண்டும். 

நாங்கள் ஜந்தர் மந்தருக்குக் கடந்த ஜனவரி மாதம் வந்தோம்.  எங்கள் போராட்டத்துக்கு போலீஸிடம் அனுமதி கடிதம் கோரியவர்கள் பா.ஜ.க-வோடு தொடர்புடையவர்கள்தான். (முன்னாள் மல்யுத்த வீராங்கனை பபிதா போகட், தீரத் ராணா ஆகியோரால் எழுதப்பட்டக் கடிதத்தை வீடியோவில் காண்பித்தார் சாக்ஷி). 

இந்த போராட்டம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவால் நடத்தப்பட்டது அல்ல. கடந்த 10-12 ஆண்டுகளாக இங்கு மல்யுத்த வீரர்கள் பல துன்புறுத்தல்கள் மற்றும் மிரட்டல்களைச் சந்திக்கின்றனர் என்பது 90% இங்குள்ள மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்குத் தெரியும். ஆனால் அதை எதிர்த்து நாங்கள் அப்போது குரல் கொடுக்காததற்குக் காரணம், மல்யுத்த வீரர்கள் ஒன்றுபடவில்லை என்பதுதான். அதோடு எங்கள் போராட்டம் WFI தலைவருக்கு எதிரானதே தவிர, அரசாங்கத்துக்கு எதிரானது அல்ல” என்று தெரிவித்தார். 

இதையடுத்து சாக்ஷி மாலிக் பேசுகையில், “அந்தச் சிறுமி தனது புகாரைத் திரும்பப் பெற்றதை நீங்கள் பார்த்தீர்கள். அவரது குடும்பம் மிரட்டப்பட்டது. இந்த மல்யுத்த வீரர்கள் ஏழைக் குடும்பங்களிலிருந்து வந்தவர்கள். ஒரு பெரும் பதவியிலிருப்பவரை எதிர்க்க தைரியத்தைச் சேகரிப்பது எளிதானது அல்ல. கடந்த மே 28-ம் தேதி போலீஸ் எங்களை குண்டுக்கட்டாக வண்டியில் ஏற்றிச் சென்றது, எங்களை மிகவும் உடைந்துபோகச் செய்தது. நாடு முழுக்க பல விமர்சனங்களும் எழுந்தன. 

சட்டம் மற்றும் ஒழுங்குக்கு எதிரான வகையில் புது நாடாளுமன்றத் திறப்பு நாள் அன்று மல்யுத்த வீரர்கள் அனுமதியில்லாமல் பேரணி நடத்தினர் எனக் கூறப்பட்டது. நான் அதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். `மகிளா சம்மான் மகாபஞ்சாயத்து’ தொடர்பாக காப் தலைவர்களிடமிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. அவர்கள் சொன்னதையே செய்தோம். ஆனால் போலீசாஸால் மிருகத்தனமாக தாக்கப்பட்டோம். 

நாட்டுக்காக எத்தனையோ பதக்கங்களை வென்றோம். ஆனால் எங்கள் கண்ணியம் மிதிக்கப்பட்டது. நாங்கள் பின்னர் ஹரித்வாரில் பதக்கங்களை மூழ்கடிக்க முடிவுசெய்தோம். ஆனால் தந்த்ரா அமைப்பைச் சேர்ந்த ஒரு நபர் பஜ்ரங்கின் கையைப் பிடித்து ஒரு மூலைக்கு அழைத்துச் சென்று, பல செல்வாக்குமிக்க நபர்களுடன் அவரைப் பேச வைத்தார். நாங்கள் அன்று பதக்கங்களை மூழ்கடித்திருந்தால் வன்முறை நடந்திருக்கலாம். எங்கள் பதக்கங்களைப் பயிற்சியாளர்கள் மற்றும் பெற்றோருக்கு வழங்கினோம். இதில் சதி இருக்கிறதா என்று புரிந்துகொள்ளும் மனநிலையில் நாங்கள் இல்லை. மன அழுத்தத்துக்கு ஆளாகியிருந்தோம். நாங்கள் எங்கள் வாழ்நாள் முழுவதும் மல்யுத்தம் செய்தோம், இந்தச் சூழ்நிலையை எப்படி கையாள்வது என்று தெரியவில்லை.

அந்தச் சம்பவத்துக்குப் பிறகு, எங்கள் பக்கம் யார் இருக்கிறார்கள், யார் எந்த அமைப்பின் அங்கம் என்று தெரியவில்லை. நாங்கள் பலரைச் சந்தித்தோம், ஆனால் யாரை நம்புவது என்று தெரியவில்லை. உள்துறை அமைச்சரைச் சந்திக்கும்படி எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

சாக்‌ஷி மாலிக்

அங்கிருந்து எங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. எனவே நாங்கள் எங்கள் பார்வையை அவர்மீது திருப்பினோம். எனவே வதந்திகளை நம்ப வேண்டாம்.  நாங்கள் ஏதேனும் தவறு செய்திருந்தால் மன்னித்து விடுங்கள். எங்கள் போராட்டத்துக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி” என்றார். 

அந்த 11 நிமிட வீடியோவின் கடைசிப் பகுதியில் சத்யவர்த் கடியன், “நாம் ஒன்றுபடாதபோது ஏதேனும் அமைப்புகள் அதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி கொள்கின்றன. நீங்கள் ஏதேனும் அநீதியை எதிர்கொண்டால், உங்கள் குரலை உயர்த்தி, ஒற்றுமையாக இருங்கள்” என்றார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.