ODI உலகக் கோப்பை 2023 இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பர் இடையே இந்தியாவில் நடைபெற உள்ளது. பிசிசிஐ தற்காலிக அட்டவணையை ஐசிசியிடம் ஒப்படைத்துள்ளது. இது அனைத்து உறுப்பு நாடுகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் உலகக்கோப்பை போட்டியில் விளையாடும் நாடுகளின் கோரிக்கையின் அடிப்படையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இறுதி அட்டவணை வெளியிடப்படும். இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஐசிசியிடம் வித்தியாசமான கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது. அதாவது ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை சென்னைக்கு பதிலாக பெங்களூரில் நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.
பாகிஸ்தானின் விசித்திரமான கோரிக்கை
பாகிஸ்தான் அணிக்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்தால் மட்டுமே உலகக் கோப்பையில் விளையாட இந்தியா வருவோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெளிவாக கூறியுள்ளது. அதற்கான அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கும் அந்த அணி, போட்டி நடைபெறும் பிட்ச் தொடர்பாக ஐசிசியிடம் சில கோரிக்கைகளை வைத்திருக்கிறது. இப்போது கொடுக்கப்பட்டிருக்கும் உத்தேச போட்டி அட்டவணையில் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சென்னையிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூருவிலும் விளையாட உள்ளது. ஆனால் இந்த இரண்டு போட்டிகளின் இடத்தையும் மாற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான சென்னையில் நடக்கவிருந்த போட்டியை பெங்களூருக்கும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பெங்களூருவில் நடக்கும் போட்டியை சென்னையிலும் நடத்துமாறு பாகிஸ்தான் கோரிக்கை வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகக் கோப்பை 2023 உத்தேச அட்டவணை
உலகக் கோப்பை 2023 முதல் போட்டி அக்டோபர் 5 ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த மைதானத்தில் நவம்பர் 19ஆம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெறும். டீம் இந்தியா தனது 9 போட்டிகளை 9 வெவ்வேறு மைதானங்களில் விளையாடுகிறது. அதே சமயம் இந்தியாவும் பாகிஸ்தானும் அக்டோபர் 15ஆம் தேதி மோதுகின்றன. இந்த போட்டியும் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. மறுபுறம், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகள் 5 மைதானங்களில் நடைபெறும்.
10 அணிகள் பங்கேற்பு
2023 ஐசிசி உலகக் கோப்பையில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும். இதில் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் தரவரிசைப்படி உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. அதே நேரத்தில், ஜூன் 18 முதல் ஜூலை 9 வரை ஜிம்பாப்வேயில் நடைபெறும் தகுதிச் சுற்றில் 2023 ODI உலகக் கோப்பையில் மீதமுள்ள இரண்டு இடங்களுக்காக 10 அணிகள் போட்டியிடும்.