சேலம் ஆத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி அளித்த பதிலில், “நாங்கள் யாருக்கும் அடிமை கிடையாது. திமுக தான் காங்கிரசுக்கு அடிமையாக இருந்து கொண்டிருக்கிறது.
முதல்வர் ஸ்டாலின் பேசும் போதெல்லாம் நான் எமர்ஜென்சி மிசாவை பார்த்தவன் என்று பெருமையாக கூறி வருகிறார்.
இவர் மிஷாவில் கைது செய்யும்போது மத்தியில் யாருடைய ஆட்சி? காங்கிரஸ் ஆட்சி. அந்த ஆட்சியில் தான் எமர்ஜென்சி கொண்டுவரப்பட்டது. அப்போதுதான் மிசாவும் கொண்டுவரப்பட்டது.
அன்று காங்கிரஸ் ஆட்சியால் பாதிக்கப்பட்ட திமுகவும், முதல்வர் ஸ்டாலினும், அவரின் குடும்பமும், இன்று ஆட்சிக்கும், அதிகாரத்துக்கும், பதவிக்கும் ஆசைப்பட்டு இன்று காங்கிரசுக்கு அடிமையாக இருந்து கொண்டிருக்கின்றனர்.
இதே திமுக தான் கடந்த 1999 ஆம் ஆண்டு பாஜகவுடன் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிட்டது. தொடர்ந்து 1999 ஆம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சி நடந்து கொண்டிருக்கும்போது திமுகவை சேர்ந்த எம்பிகள் அமைச்சர்களாக இடம் பெற்று இருந்தனர்.
ஒவ்வொரு காலத்துக்கும் ஏற்றபடி தங்களுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளக் கூடிய ஒரே கட்சி திமுக மட்டும் தான். நாங்கள் யாருக்கும் அடிமையாக இருந்ததில்லை” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.