திருவண்ணாமலை: விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் நடந்ததை போலவே திருவண்ணாமலையிலும் ஜாதி தீண்டாமை தலைதூக்கியுள்ளது. அங்குள்ள ஒரு கோயிலுக்குள் பட்டியலின மக்கள் வருவதற்கு ஒரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவிப்பதால் அங்கு பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்பாதி கிராமத்தில் நடந்த சம்பவம் மொத்த தமிழகத்தையும் அதிர வைத்தது. அங்குள்ள திரெளபதி அம்மன் கோயிலுக்குள் பட்டியலின மக்கள் வரக்கூடாது என அங்கு பெரும்பான்மையாக உள்ள சமூகத்தினர் போர்க்கொடி தூக்கினர். இதனால் அங்கு இருதரப்பு மக்கள் இடையே மோதல் வெடிக்கும் சூழல் உருவானது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அடுத்த உத்தரவு வரும் வரை கோயிலை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அந்தக் கோயிலில் தற்போது யாருமே செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் ஏற்படுத்தி இருக்கும் அதிர்வலைகள் அடங்குவதற்கு உள்ளாக திருவண்ணாமலையிலும் இப்படியொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த செல்லங்குப்பம் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு பொதுப்பிரிவினர் மட்டுமே வழிபாடு செய்வார்களாம். பட்டியலின மக்களுக்காக தனியாக காளியம்மன் கோயில் உள்ளதாக தெரிகிறது.
இந்த சூழலில், மாரியம்மன் கோயிலுக்குள் பட்டியலின மக்களையும் அனுமதிக்கக் கோரி அந்த சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இது, பொதுப்பிரிவு மக்கள் இடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியதால் இரு தரப்பைச் சேர்ந்தவர்களும் நேற்று பயங்கரமாக மோதிக் கொண்டனர். இதில் பலருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனால் தற்போது அந்த கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவி வருவதால், அங்கு நூர்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இருதரப்பு மக்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.