கோவில்பட்டி:
திரைப்படத்தில் நடிப்பதால் மட்டுமே ஒரு நாட்டையும், இனத்தையும் வழிநடத்தும் தலைவனாகி விடலாம் என நினைப்பதே பெரிய அவமானம் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்
தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் நேற்று நடத்திய நிகழ்ச்சி, அரசியலுக்கான முன்னோட்டமாக கருதப்படும் சூழலில் சீமான் இவ்வாறு பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் நேற்று பரிசுகளை வழங்கினார். 234 தொகுதிகள் என்ற விஷயமே அவரது அரசியல் நுழைவை மறைமுகமாக தெரிவிப்பதாக இருந்தது. அதேபோல, நேற்றைய நிகழ்ச்சியில் பேசிய விஜய், “ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது.. பெரியார், அம்பேத்கர், காமராஜரை மாணவர்கள் படிக்க வேண்டும்” எனக் கூறினார். இதுவும் அரசியல் பேச்சாகவே பார்க்கப்பட்டது. இதனால் விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, விஜய்யின் இந்த பேச்சு குறித்து பல அரசியல் கட்சித் தலைவர்களிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, அவர்கள் சாதாரணமாக பதிலளித்துவிட்டு சென்றனர். ஆனால், சீமான் மட்டும் சிறிது பதற்றத்துடனேயே பதிலளித்ததை காண முடிந்தது. “நான் 16 வருடமாக பேசியதைதான் தம்பி விஜய் இப்போது பேசி வருகிறார். அவர் அரசியலுக்கு வருவதால் எனக்கு பாதிப்பு இல்லை” என சீமான் நேற்று தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், “தமிழ்நாட்டு அரியல் சினிமா நோக்கி செல்வது சாபக்கேடான விஷயம். திரைக்கவர்ச்சி மிகப்பெரிய பேராபத்து. படத்தில் நடிப்பதால் மட்டுமே ஒரு நாட்டை, இனத்தை வழிநடத்தும் தலைவனாகி விடலாம் என்று நினைப்பதே அவமானம். இது தானாக மாறாது. அனைவரும் சேர்ந்து தான் மாற்ற வேண்டும்” எனக் கூறினார். யாருடைய பெயரையும் சீமான் குறிப்பிட்டு பேசாத போதிலும் இது விஜய்க்கான எதிர்வினையாகவே பார்க்கப்படுகிறது.
சீமானின் இந்தக் கருத்தை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, சினிமாவில் நடித்து வருவது அரசியலுக்கு தகுதி கிடையாது என்றால், சீமானும் சினிமாவில் இருந்து வந்தவர்தானே. அவருக்கு எப்படி தகுதி வந்தது? என நெட்டிசன்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.