திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஐடி விங்க் செயலாளர் சேட்டை கார்த்திக் உள்பட 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதற்கிடையே பொய் வழக்கு போட்டுள்ளதாக கூறி அதிமுகவினர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது பெரும் பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கீழ்மாத்தினிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கவுதம் (வயது 27). திமுக பிரமுகர். இவர் நேற்று இரவில் வேடசந்தூர் ஆத்துமேடு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அவரை ஒரு கும்பல் சுத்துப்போட்டது.
இதையடுத்து அந்த கும்பல் அவரிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டது. இந்த தகராறு முற்றவே ஆத்திரமடைந்த கும்பல் கவுதமை தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றது.
இதில் காயமடைந்த கவுதம் சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு அவர் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
இதற்கிடையே சம்பவம் குறித்து கவுதம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும் கவுதமை தாக்கியதாக ஆத்துமேடு பகுதியை சேர்ந்த மருதுபாண்டி (24), பெரியசாமி (23), கண்ணன் (20), சக்திவேல் (20) மற்றும் சேட்டை கார்த்திக் ஆகியோரை கைது செய்தனர்.
இதில் சேட்டை கார்த்திக் என்பவர் அதிமுக ஐடி விங்க்கின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் ஆவார். மேலும் கடந்த ஆட்சியில் சேட்டை கார்த்திக் மற்றும் கவுதம் இடையே பார் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான விரோதத்தில் தான் கவுதம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கைதான 5 பேரும் நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
முன்னதாக இந்த கைது நடவடிக்கைக்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதாவது சேட்டை கார்த்திக் மீது பொய் வழக்கு போட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினர். அதோடு மட்டுமின்றி வேடசந்தூர் நகர அதிமுக செயலாளர் பாபுசேட், மாவட்ட சிறுபான்மை அணி துணை செயலாளர் மாரம்பாடி போஸ் மற்றும் அதிமுகவினர் வேடசந்தூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.