புதுடெல்லி: சுதந்திரத்தின் போது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உயிருடன் இருந்திருந்தால் இந்தியா இரண்டாக பிரிந்திருக்காது என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜியின் முதல் நினைவு சொற்பொழிவு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேசியதாவது: நேதாஜி தனது வாழ்நாளில் பல்வேறு சந்தர்ப்பங்களில் துணிச்சலை வெளிப்படுத்தி உள்ளார்.
குறிப்பாக மகாத்மா காந்திக்கு சவால் விடுக்கும் துணிச்சலும் அவரிடம் இருந்தது. ஆனால் காந்தி அரசியல் நடவடிக்கைகளில் முதல் இடத்தில் இருந்தார். இதையடுத்து நேதாஜி காங்கிரஸிலிருந்து விலகி போராட்டத்தைத் தொடங்கினார். இந்திய மற்றும் உலக வரலாற்றில் துணிச்சல் மிக்கவர்களாக விளங்கியவர்கள் வெகு சிலர்தான். அதில் நேதாஜியும் ஒருவர்.
‘நான் பிரிட்டிஷாரை எதிர்த்து போரிடுவேன். சுதந்திரத்துக்காக பிச்சை எடுக்க மாட்டேன். சுதந்திரம் என்னுடைய உரிமை. அதை நான் பெற்றே ஆக வேண்டும்’ என்ற சிந்தனை நேதாஜி மனதில் இருந்தது. சுதந்திரத்தின்போது நேதாஜி உயிருடன் இருந்திருந்தால் இந்தியா இரண்டாக பிரிந்திருக்காது. நான் ஒரே ஒரு தலைவரை (நேதாஜி) மட்டுமே ஏற்றுக் கொள்வேன் என முகமது அலி ஜின்னா கூறியிருந்தார்.
வாழ்க்கையில் முயற்சி செய்வது பெரிய விஷயமா அல்லது முடிவு பெரிய விஷயமா என்ற கேள்வி நமக்குள் எழும். நேதாஜி முயற்சியின் மீது யாருக்கும் சந்தேகம் இல்லை. அதேபோல் காந்தி அனைவராலும் மதிக்கப்படுகிறார். ஆனால், ஒருவரின் முயற்சிக்கு கிடைத்த முடிவு என்ன என்ற அடிப்படையில்தான் மக்கள் அவரை மதிப்பிடுவார்கள். எனவே, நேதாஜியின் முயற்சி வீணாகிவிட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.