இம்பால்: மணிப்பூரில் பல இடங்களில் நேற்று முன்தினம் இரவு கலவரம் ஏற்பட்டது. அவர்களை பாதுகாப்புப் படையினர் விரட்டியடித்து கொடி அணிவகுப்பு நடத்தினர்.
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி இனத்தவர் பழங்குடியினர் அந்தஸ்து கோருவதால், அவர்களுக்கும் குகி மற்றும் நாகா பழங்குடியினருக்கும் இடையே கடந்த மாதம் மோதல் ஏற்பட்டது.
வன்முறையை கட்டுப்படுத்தும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டும், அங்கு தொடர்ந்து வன்முறை நடைபெறுகிறது.
மணிப்பூரின் விஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள குவக்தா, சூரசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள காங்வாய் பகுதியில் தானியங்கி துப்பாக்கி சூடு சத்தம் நேற்று அதிகாலை வரை கேட்டது. பல இடங்களில் கலவரக்காரர்கள் ஒன்று கூடி தீ வைக்கும் சம்பவங்களில் ஈடுபட்டனர்.
அட்வான்ஸ் மருத்துவமனைக்கு அருகில் உள்ள அரண்மனை வளாகத்துக்கு தீவைக்க ஆயிரம் பேர் கொண்ட கும்பல் முயற்சித்தது. அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளைவீசியும், ரப்பர் குண்டுகளால் சுட்டும் அதிரடிப் படையினர் கலைத்தனர். இதில் 2 பேர் காயம் அடைந்தனர்.
மணிப்பூர் பல்கலைக்கழகம் அருகே தோங்ஜூ என்ற இடத்தில் 300 பேர் கூடி, உள்ளூர் எம்.எல்.ஏ.வின் வீட்டுக்கு தீ வைக்க முயன்றனர். அங்கு அதிரடிப்படையினர் விரைந்து வன்முறையாளர்களை விரட்டியடித்தனர்.
இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள இரிங்பம் காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தி, அங்குள்ள ஆயுத கிடங்கில் இருந்து துப்பாக்கிகளை எடுத்துச் செல்ல ஒரு கும்பல் முயற்சித்தது. அவர்களையும் அதிரடிப்படையினர் வந்து விரட்டியடித்தனர்.
சின்ஜெமாய் என்ற இடத்தில் உள்ள பாஜக அலுவலகத்தை 300பேர் கொண்ட கும்பல் நேற்று முன்தினம் இரவு சுற்றி வளைத்தது. அங்கு விரைந்த ராணுவத்தினர் அவர்களை விரட்டியடித்தனர். பாஜக மாநில தலைவர் சாரதாதேவியின் வீடு, மேற்கு இம்பாலில் உள்ளது. அந்த வீட்டுக்கு தீ வைக்க ஒரு கும்பல் முயற்சித்தது. அவர்களை அதிரடிப்படையினர் விரட்டியடித்தனர்.
இதற்கிடையில், “மணிப்பூர் இந்தியாவின் அங்கம் என்றால், அங்கு நடந்துகொண்டிருக்கும் வன்முறை குறித்து பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்திருக்க வேண்டும்” என்று மணிப்பூர் மாநில முன்னாள் முதல்வர் ஓக்ரம் இபோபி சிங் தெரிவித்துள்ளார்.