இம்பால்: மணிப்பூர் தலைநகர் இம்பாலில் ஒரு கும்பல் நேற்று வீடுகளுக்கு தீ வைத்தது. இதன்காரணமாக தலைநகரில் கலவரம் ஏற்பட்டது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும் குகி சமூகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. இதன்காரணமாக கடந்த மே 3-ம் தேதி முதல் ஒரு மாதத்துக்கும் மேலாக அந்த மாநிலத்தில் வன்முறை, கலவரம் நீடிக்கிறது. இதுவரை 105 பேர் உயிரிழந்துள்ளனர்.
மணிப்பூரின் கமென்லாக் கிராமத்தில் குகி சமூகத்தை சேர்ந்த தீவிரவாதிகள் நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில் மேதேயி சமூகத்தை சேர்ந்த 13 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக குகி சமூகத்தை சேர்ந்த மாநில அமைச்சர் நெம்சாவின் இம்பால் நகரில் உள்ள வீட்டை மர்ம நபர்கள் நேற்றுமுன்தினம் தீ வைத்து எரித்தனர். இதைத் தொடர்ந்து இம்பாலின் நியூ செக்கான் பகுதியில் உள்ள வீடுகளை ஒரு கும்பல் நேற்று தீ வைத்து எரித்தது. தீ வைக்கப்பட்ட வீடுகள் குகி சமூகத்தினருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.
சம்பவ பகுதியில் அதிரடிப் படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். அவர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதிரடிப் படை வீரர்கள் தடியடி நடத்தியும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் கூட்டத்தைக் கலைத்தனர்.
இதனிடையே மணிப்பூர் பழங்குடி கூட்டமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது: மணிப்பூர் கலவரத்தில் குகி சமூகத்தை சேர்ந்த 81 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 31,410 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். 237 தேவாலயங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. 141 கிராமங்கள் அழிக்கப்பட்டு உள்ளன.
மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து குகி சமூகத்தினரை அழிக்க முயற்சி செய்கின்றன. ஆளும் கட்சியான பாஜகவின் ஆதரவு பெற்ற கும்பல்கள் மாநிலத்தில் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மத்திய, மாநில அரசுகள் மீது நம்பிக்கை இல்லை. எனவே மணிப்பூரின் பாதுகாப்பு ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரப்பட்டு உள்ளது.