சென்னை:
திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக நிர்வாகி குஷ்பு, “முதல்வர் ஸ்டாலினை கட்சி ரீதியாக கடுமையாக எதிர்ப்பேன்; ஆனால் யாரிடமும் விட்டுக்கொடுக்க மாட்டேன்” எனக் கூறியுள்ளார்.
திமுகவைச் சேர்ந்த பிரபல பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நேற்று நடந்த ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ஆளுநர் ஆர்.என். ரவியை தரக்குறைவாக பேசினார்.
மேலும், பாஜக நிர்வாகியும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்புவையும் மிகவும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்தார். இவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் தீயாக பரவி பல்வேறு விமர்சனங்களையும், கண்டனங்களையும் பெற்றது.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக இன்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு கண்ணீர் விட்டபடி பேசினார். “பெண்கள் பற்றி அவதூறாக பேச இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? கருணாநிதி இருந்த போது திமுக இப்படி கிடையாது பெண்களை அசிங்கப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு கருணாநிதியை தான் திமுகவினர் அசிங்கபடுத்தி வருகிறார்கள். திமுகவில் இப்படிப்பட்ட ஆட்களைதான் தீனி கொடுத்து வளர்க்கிறார்கள். நாளை இதுதொடர்பாக புகார் அளிக்க இருக்கிறேன்” என்றார்.
இந்நிலையில், இந்த பேட்டி முடிந்த அடுத்த அரை மணிநேரத்துக்கு உள்ளாக சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கபபட்டதுடன், கைதும் செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக, குஷ்புவை சந்தித்த செய்தியாளர்கள், பிரஸ்மீட் முடிந்த அரைமணிநேரத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து என்ன நினைக்கிறீர்கள்?” எனக் கேட்டனர்.
இதற்கு பதிலளித்த குஷ்பு, “இந்த விஷயம் நிச்சயமாக முதல்வரின் கவனத்திற்கு சென்றிருக்கும். அதனால்தான் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆனாலும் இந்த விஷயத்தை நான் விட மாட்டேன். நான் எடுக்க வேண்டிய நடவடிக்கையை எடுப்பேன். முதல்வர் ஸ்டாலினை தொடர்ந்து கட்சி ரீதியாக எதிர்ப்பேன். நூறு கேள்விகளை எழுப்புவேன்.
அதே சமயத்தில், முதல்வர் என்ற முறையில் அவருக்கு நான் நிச்சயம் மரியாதை கொடுப்பேன். மற்ற மாநிலங்களில் இருந்து யாராவது முதல்வரை தவறாக பேசினால் விட்டுக்கொடுக்க மாட்டேன். அவர்களிடம் சண்டை போடுவேன்” என குஷ்பு கூறினார்.