ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்திருக்கும் தனியார் பள்ளியில், நேற்று முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு தான் வருவதற்கு முன்பாகவே நிகழ்ச்சி தொடங்கப்பட்டதாகக் கூறி ஆட்சியரிடம் எம்.பி நவாஸ்கனி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அமைச்சர் ராஜகண்ணப்பன் குறிக்கிட்டதால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருமையில் இருவரும் மாறி மாறி சண்டையிட்டுக் கொண்டனர். அதைப்பார்த்து அவர்களின் ஆதரவாளர்களும் கைகலப்பில் ஈடுபடத் தொடங்கினர். இதையடுத்து ஆட்சியர் விஷ்ணு சந்திரன் இருவருக்கும் இடையே குறுக்கே சென்று அமைச்சரையும், எம்.பி-யையும் சமாதானம் செய்ய முயன்றார்.
அப்போது நவாஸ்கனி அருகே நின்றிருந்த அவருடைய உதவியாளர் விஜயராமு, ஆட்சியரின் நெஞ்சைப் பிடித்து அவரைக் கீழே தள்ளிவிட்டார். இதனைச் சற்றும் எதிர்பார்க்காத ஆட்சியர் விஷ்ணு சந்திரன், நிலைதடுமாறி கீழே விழுந்தார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஆட்சியரின் தனி காவலர், அரசு அதிகாரிகள் கீழே விழுந்த ஆட்சியரைக் கையைப் பிடித்து மேலே தூக்கிவிட்டனர்.
ஆட்சியரைக் கீழே தள்ளிவிட்டதால், அரசு அதிகாரிகள் கொந்தளித்தனர். நிலைமை தனக்கு எதிராகத் திரும்பியதை அறிந்து நவாஸ்கனி எம்.பி, தலைமைச் செயலாளரைத் தொடர்பு கொண்டு, ஆட்சியர்மீது புகார் அளித்துவிட்டு வெளிநடப்பு செய்வதாகக் கூறிப் புறப்பட்டுச் சென்றார். அதன் பிறகு அமைச்சர் தலைமையில் தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெற்றது.
அமைச்சர், எம்.பி மோதிக்கொண்டதில் ஆட்சியர் கீழே தள்ளிவிடப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதற்கு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை உட்பட எதிர்க்கட்சியினர் மற்றும் அரசுப் பணியாளர் சங்கத்தினர் கண்டனத்தைப் பதிவுசெய்து வருகின்றனர். இந்த விவகாரம் பூதாகரமாகி வருவதைத் தொடர்ந்து, ஆட்சியரைக் கீழே தள்ளிவிட்ட எம்.பி நவாஸ்கனியின் உதவியாளர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அலுவலர் தினேஷ்குமார் கேணிக்கரை காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின்பேரில், ஆட்சியரின் நெஞ்சைப் பிடித்துக் கீழே தள்ளிய எம்.பி நவாஸ்கனியின் உதவியாளரான சாயல்குடி அருகே மூக்கையூர் பகுதியைச் சேர்ந்த விஜயராமு மீது ஆய்வாளர் ஆடிவேல், அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தல், தன்னிச்சையாகத் தாக்கிக் காயப்படுத்துதல், அரசு ஊழியரின் பணியை தடுத்து வன்முறையில் ஈடுபடுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்து, விசாரணை நடத்தி வருகிறார்.