ராம்சரணிடம் பணம் வாங்கி தராமல் ஏமாற்றிய பவன் கல்யாண்
தெலுங்கு திரையரங்கில் சிரஞ்சீவி ஒரு நடிகராக ஸ்திரமான இடத்தை பிடித்த பின்னர் அவர்கள் குடும்பத்தில் இருந்து அவரது சகோதரர்கள் நாகபாபு, பவன் கல்யாண், பின்னர் அவர்களை தொடர்ந்து ஒரு ராம் சரண் என அடுத்தடுத்த நபர்கள் சினிமாவில் நடிகர்களாக அடியெடுத்து வைக்க ஆரம்பித்தனர். அப்படி சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் நடிகராக சிறுத்தா என்கிற படத்தின் மூலம் அறிமுகமானபோது சிரஞ்சீவி, ராம்சரண், பவன் கல்யாண் மூவரும் இணைந்து பங்கேற்ற புரமோஷன் வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.
அதில் பவன் கல்யாண் பேசும்போது தான் சினிமாவில் நடிக்க நுழைவதற்கு முன்பு தனக்கு மாதம் 5000 ரூபாய் பாக்கெட் மணியாக தனது சகோதரர் சிரஞ்சீவி தருவார் என்றும் அதன்பிறகு தான் முதல் படத்தில் நடிக்க ஆரம்பித்ததில் இருந்து பாக்கெட் மணி தருவது நின்று விட்டது என்றும் கூறியிருந்தார். நானும் ஒரு படத்தில் நடித்து விட்டதால் அதற்கடுத்த அண்ணனிடமோ அல்லது அண்ணியிடமோ செலவுக்கு பணம் கேட்பதற்கு கூச்சமாக இருந்தது என்றும் கூறினார்.
ஆனால் அதேசமயம ராம்சரண் உள்ளிட்ட வீட்டில் இருந்த குட்டிப்பையன்களுக்கு தாராளமாக பாக்கெட் மணி கிடைக்கும் ஆனால் அவர்களுக்கு அதை எப்படி செலவு செய்வது என்று தெரியாது என்றும் கூறிய பவன் கல்யாண் நான் பெரிய நடிகராகி சம்பாதிக்கும் போது இதைவிட பல மடங்கு வட்டி போட்டு உங்களுக்கு பணம் தருவேன் என்று கூறி அவர்களிடமிருந்து தான் கைச்செலவுக்கு பணத்தைப் பெற்றுக் கொள்வேன் என்றும் கூறியுள்ளார்.
அதன்பிறகு தான் படங்களில் பிசியாக நடிக்க ஆரம்பித்தபோது ராம்சரண் உள்ளிட்ட சிறுவர் கேங் தன்னை தேடி வந்து, தாங்கள் கொடுத்த பணத்தை கேட்டபோது எந்த பணம் கொடுத்தீர்கள்..? ஓடுங்கள் என்று விரட்டிவிடுவேன் என்றும் நகைச்சுவையுடன் கூறுகிறார்.