பாட்னா / லக்னோ: வட இந்தியாவில் வெயில் வாட்டி வதைக்கும் சூழலில் பிஹார் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் வெப்ப அலைகளால் 98 பேர் பலியாகினர். இவர்களில் உத்தரப் பிரதேசத்தில் 54 பேரும், பிஹாரில் 44 பேரும் பலியாகியதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மிரட்டிய ஜூன் 15, 16, 17: வழக்கமாகவே கோடை காலத்தில் வட இந்தியாவில் வெப்பம் வாட்டி வதைக்கும். இந்த ஆண்டும் அதே நிலைதான். அதுவும் கடந்த ஜூன் 15, 16, 17 தேதிகளில் உத்தரப்பிரதேசம் மற்றும் பிஹாரில் கடுமையான வெப்பம் நிலவியது. அந்த நாட்களில் உ.பி.யின் பாலியா மாவட்டத்தில் மட்டும் 400 பேர் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 54 பேர் உயிரிழந்தனர். பலரும் காய்ச்சல், மூச்சுத்திணறல், வயிற்றுப்போக்கு போன்ற வெப்பம் சார்ந்த உடல் உபாதைகள் காரணமாக அனுமதிக்கப்பட்டனர். அனுமதியானவர்களில் 60 வயதுக்கும் மேற்பட்டவர் அதிகம்.
இது குறித்து தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஜெயந்த் குமார் கூறுகையில், பாலியா மாவட்டத்தில் மிகக் கடுமையான வெப்ப அலை நிலவுகிறது. அதனால் மருத்துவமனையில் மக்கள் அனுமதியான வண்ணம் உள்ளனர்.
மருத்துவமனையின் அனுமதியானவர்களில் பலருக்கும் ஏற்கெனவே ஏதேனும் உபாதை இருந்த நிலையில் வெப்பம் அதனை இன்னும் மோசமாக்கி அவர்களை நிலைகுலையச் செய்துள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் மாரடைப்பு, மூளையில் பக்கவாதம், வயிற்றுப்போக்கு போன்ற காரணங்களால் உயிரிழந்தனர். ஜூன் 15 ஆம் தேதி 23 பேரும், ஜூன் 16-ல் 20 பேரும், ஜூன் 17 மாலை 4 மணி நிலவரப்படி 11 பேரும் உயிரிழந்தனர் என்றார். இந்நிலையில் இந்த மரணங்கள் குறித்து விசாரிக்க லக்னோவில் இருந்து மருத்துவக் குழுவை அரசு அனுப்பவுள்ளது.
பாலியா மாவட்ட மருத்துவமனையின் தலைமை மருத்துவக் கண்காணிப்பாளர் திவாகர் சிங் கூறுகையில், “மருத்துவமனையில் வெப்ப அலை சார்ந்த நோய்களுடன் அனுமதியானவர்களுக்கு மேலும் நோய் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக மின்விசிறி, ஏர் கூலர், ஏசி இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதேபோல் மருத்துவமனையில் கூடுதலாக மருத்துவர்களும், செவிலியரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்” என்றார்.
பிஹாரில் 44 பேர் பலி: உத்தரப் பிரதேசத்தின் நிலவரம் இவ்வாறாக இருக்க வெப்ப அலை சார்ந்த பாதிப்புகளால் பிஹாரிலும் 44 பேர் பலியாகினர். கடந்த 24 மணி நேரத்தில் 44 பேர் பலியாகியுள்ளனர். இந்த 44 பேரில் 35 பேர் பாட்னாவில் இறந்தனர். 19 பேர் நாலந்தா மருத்துவக் கல்லூரியிலும், 16 பேர் பாட்னா மருத்துவக் கல்லூரியிலும் இறந்தனர். 11 மாவட்டங்களில் நேற்று (ஜூன் 17) வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸுக்கு மேல் பதிவானது. கடுமையான வெப்பம் காரணமாக தலைநகர் பாட்னாவில் ஜூன் 24 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களிலும் நிலவரத்துக்கு ஏற்ப விடுமுறை அறிவித்துக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.