நடிகர் விஜய் தமிழத்தின் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளை இன்று நேரில் அழைத்து சந்தித்தார். அவர்களுக்கு ஊக்கத்தொகை அளித்த நடிகர் விஜய், சான்றிதழ்கள் வழங்கியதோடு பொன்னாடை போர்த்தியும் கவுரவித்தார்.
மாணவர்களோடு மாணவராக அமர்ந்து அவர்களுடன் பேசி மகிழ்ந்தார் விஜய், நாளைய வாக்காளர்கள் என்று மாணவ மாணவியரை குறிப்பிட்ட விஜய், தங்களின் பெற்றோர் பணம் பெற்றுக்கொண்டு ஓட்டுப் போடுவதை தடுக்க வேண்டும் என அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
மாணவர்கள் மத்தியில் நடிகர் அரசியல் தலைவர்கள் குறித்தும் நடிகர் விஜய் பேசினார். சென்னை நீலாங்கரையில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னிட்டு மாணவ மாணவியர் காலையிலேயே மண்டபத்திற்கு வந்துவிட்டனர்.
இந்நிலையில் மாணவ மாணவிகளுக்காக காலை மற்றும் மதியம் என இருவேளையும் உணவு வழங்க உத்தரவிட்டார் நடிகர் விஜய். இதற்காக காலையில் ஒரு பக்கம் டிஃபன் ரெடியாக மதிய உணவிற்கான சமையலும் ஒரு பக்கம் ஜரூராக நடைபெற்றது. இன்று சனிக்கிழமை அமாவாசை என்பதால் முழுக்க முழுக்க சைவ உணவு வகைகளேயே வழங்க கூறினாராம்.
இதற்காக 15 வகை சைவ உணவுகள் கொண்ட மெனுவையும் வழங்கியுள்ளார். அதில் சாதம், வெஜ் புலாவு, செட்டி நாடு எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு, வடை, பாயாசம், காலிஃபிளவர் பக்கோடா, பொங்கள், உருளைக் கிழங்கு பொறியல் கூட்டு உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன.
புதுச்சேரியில் இருந்து வந்த சமையல் வல்லுநர்கள் விடிய விடிய மாணவ மாணவிகளுக்காக சமைத்துள்ளனர். 30 மூட்டை அரிசி சமையலுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. 6000 முதல் 15000 பேர் வரை திருப்தியாக சாப்பிடும் அளவுக்கு தாராளமாக சாப்பிடும் வகையில் சமைக்குமாறு கூறினாராம் விஜய்.