புதுடெல்லி: விடுதலைப்புலிகள் அமைப்பை புதுப்பிக்க போதைப்பொருள் மற்றும் ஆயுத வர்த்தகத்தில் ஈடுபட்டது தொர்பான வழக்கில் இலங்கையை சேர்ந்த 10 பேர் மற்றும் இந்தியாவை சேர்ந்த 3 பேருக்கு எதிராக என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இந்தியாவிலும், இலங்கையிலும் தமிழீழ விடுதலைப்புலிகள் (எல்டிடிஇ) அமைப்பை புதுப்பிக்கும் சதிச் செயல் தொடர்பான வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது. இது தொடர்பான வழக்கை என்ஐஏ கடந்த 2022, ஜூலையில் பதிவு செய்து 13 பேரை கைதுசெய்தது. இந்நிலையில் இவர்களுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம், சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம் மற்றும் போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இந்த 13 பேரில் எம்.செல்வகுமார், விக்னேஸ்வர பெருமாள், ஐயப்பன் நந்து ஆகிய மூவரும் இந்தியர்கள். சி.குணசேகரன், புஷ்பராஜா, முகம்மது ஆஸ்மின் உள்ளிட்ட 10 பேர் இலங்கையை சேர்ந்தவர்கள் ஆவர்.
என்ஐஏ தனது குற்றப்பத்திரிகையில் கூறியிருப்பதாவது: இந்தியா மற்றும் இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பை புதுப்பிக்கும் நோக்குடன் ஆயுதங்களை வாங்கி பதுக்கி வைப்பதற்காக சட்டவிரோத போதைப் பொருள் வர்த்தகத்தில் இவர்கள் ஈடுபட்டனர்.
பாகிஸ்தானை சேர்ந்த ஹாஜி சலீம் என்பவரிடம் இருந்து போதைப் பொருள் பெறப்பட்டது. இந்த ரகசிய வர்த்தகத்திற்கு பல்வேறு வெளிநாட்டு வாட்ஸ் அப் எண்களை குற்றவாளிகள் பயன்படுத்தி வந்தனர்.
திருச்சி சிறப்பு முகாமில் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் குற்றச்செயல் மூலம் கிடைத்த பணத்தில் அவர்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வருவது தெரியவந்தது. பல்வேறு மொபைல் போன்கள் மற்றும் சிம் கார்டுகள் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் பல்வேறு டிஜிட்டல் சாதனங்கள், போதைப் பொருள் பரிமாற்றம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் 9 தங்கக் கட்டிகள் விசாரணையின்போது பறிமுதல் செய்யப்பட்டன.
போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணமும் தங்கமும் ஹவாலா பரிமாற்றம் மூலம் சென்னைக்கும் இலங்கைக்கும் இடையே அனுப்பப்பட்டன. குற்றவாளிகள் கிரிப்டோ தளங்களை பயன்படுத்தி பல பரிவர்த்தனைகள் மேற்கொண்டதும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு என்ஐஏதனது குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.
இத்தகவலை என்ஐஏ வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. குற்றவாளிகள் கிரிப்டோ தளங்களை பயன்படுத்தி பல பரிவர்த்தனைகள் மேற்கொண்டனர்.