புதுடெல்லி: பிரதமர் மோடியின் அரசாங்கம், பொதுத்துறை நிறுவனங்களில் இரண்டு லட்சம் வேலைகளை ஒழித்துக் கட்டி, ஒப்பந்த வேலைகளை அதிகரித்திருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து இன்று (ஜூன் 18) தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி: பொதுத்துறை நிறுவனங்கள் இந்தியாவின் பெருமையாக இருந்ததோடு, இந்திய இளைஞர்களின் வேலை வாய்ப்புக் கனவாகவும் இருந்தது. ஆனால், இன்று இவை அரசாங்கத்தின் முன்னுரிமை அல்ல.
நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களில் 2014ஆம் ஆண்டில் 16.9 லட்சமாக இருந்த வேலைவாய்ப்பு 2022ல் 14.6 லட்சமாக குறைந்துள்ளது. வளர்ந்து கொண்டிருக்கும் நாட்டில் வேலை வாய்ப்புகள் குறையுமா? பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 1,81,127 பேர் வேலை இழந்துள்ளனர். SAIL நிறுவனத்தில் 61,928 பேர், MTNL-ல் 34,997 பேர், SECL-ல் 29,140 பேர், FCI-ல் 28,063 மற்றும் ஓஎன்ஜிசியில் 21,120 பேர் வேலை இழந்துள்ளனர்.
ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பு என்று பொய் வாக்குறுதி அளித்தவர்கள், வேலைகளை அதிகரிப்பதற்குப் பதிலாக, 2 லட்சத்துக்கும் அதிகமானோரை வேலையை விட்டு நீக்கியுள்ளனர்.
எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த நிறுவனங்களில் ஒப்பந்த ஆட்சேர்ப்பு கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது. ஒப்பந்த ஊழியர்களை அதிகரிப்பது அரசியலமைப்புச் சட்டத்தின் இடஒதுக்கீட்டு உரிமையைப் பறிப்பதாக ஆகுமல்லவா? அல்லது இந்த நிறுவனங்களை தனியார்மயமாக்கும் சதியா?
தொழிலதிபர்களின் கடன் தள்ளுபடி, பொதுத்துறை நிறுவனத்தில் இருந்து அரசு வேலைகள் ஒழிப்பு. என்ன வகையான நீடித்த தன்மை இது?
இது உண்மையிலேயே ‘அமிர்த காலம்’ என்றால் ஏன் இப்படி வேலைகள் காணாமல் போகின்றன? ஒருசில க்ரோனி கேபிடலிச நண்பர்களின் நலனுக்காக லட்சக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கை நசுக்கப்படுவதால், இந்த அரசாங்கத்தின் கீழ் நாடு வரலாறு காணாத வேலையில்லா திண்டாட்டத்தில் சிக்கித் தவிக்கிறது.
இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்கள் சரியான சூழலையும், அரசாங்கத்தின் ஆதரவையும் பெற்றால், அவற்றால் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்க முடியும். பொதுத்துறை நிறுவனங்கள் நாட்டின் சொத்து, அவை இந்தியாவின் முன்னேற்றப் பாதையை வலுப்படுத்தும் வகையில் ஊக்குவிக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.