சென்னை: Adipurush (ஆதிபுருஷ்) ஆதிபுருஷ் படத்தில் சில வசனங்களுக்கு எழுந்த எதிர்ப்பை அடுத்து அவை மாற்றியமைக்கப்படுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்திருக்கும் படம் ஆதிபுருஷ். ராமாயணத்தை அடிப்படையாக உருவாகியிருக்கும் இப்படத்தில் சைஃப் அலிகான் ராவணன் கதாபாத்திரத்திலும், கீர்த்தி சனோன் சீதை கதாபாத்திரத்திலும் நடித்திருக்கின்றனர். ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம்,மலையாளம் என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக கடந்த 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது
ஜெய் அனுமன்: படம் வெளியாகும்போது அனைத்து திரையரங்குகளிலும் அனுமனுக்கென்று ஒரு சீட் ஒதுக்கப்படும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி ஆதிபுருஷ் திரையிடப்படும் திரையரங்குகளில் சீட் ஒதுக்கப்பட்டிருந்தது. ஒரு திரையரங்கில் அனுமனின் புகைப்படம் போட்ட துண்டை சீட்டில் போட்டு அதகளம் செய்திருந்தது திரையரங்கம். அதேபோல் ஹைதராபாத்தில் திரையரங்குக்கு குரங்குகள் வந்ததால் படத்தை பார்க்க அனுமன் வந்துவிட்டார் என ரசிகர்கள் கத்தி ஆரவாரம் செய்தனர். மேலும் நெகட்டிவ் விமர்சனம் செய்ததால் ஒருவர் தாக்கவும்பட்டார்
என்ன பிரச்னை: படத்தை பார்த்தவர்களில் ஒரு தரப்பினர் படத்தின் முதல் பாதி சுமாராக இருக்கிறது என்றும், சிலர் இரண்டாம் பாதி சுமாராக இருக்கிறது என்றும் கூறுகின்றனர். ஒருசிலரோ ஒட்டுமொத்த படமுமே திராபையாக இருக்கிறது என்று விமர்சனம் வைக்கின்றனர். அதேசமயம் விமர்சிப்பவர்களின் பொதுவான விமர்சனமாக இருப்பது படத்தில் இருக்கும் கிராஃபிக்ஸ் காட்சிகள்தான்.கார்ட்டூன் காட்சிகளே பரவாயில்லை என்று ஓபனாகவே பேசிவருகின்றனர்.
பாக்ஸ் ஆபிஸ்: படத்துக்கு கிடைத்திருக்கும் கலவையான விமர்சனத்தின் காரணமாக படத்தின் பாக்ஸ் ஆபிஸும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. முதல் நாளில் மொத்தமே உலகம் முழுவதும் 60 கோடி ரூபாய்வரை வசூலித்த அந்தப் படம் இதுவரை 160 கோடி ரூபாய் வரைதான் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் படத்தின் பட்ஜெட்டோ கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய்வரை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஆதிபுருஷ் பலத்த அடி வாங்கியிருப்பது உறுதியாகியுள்ளது.
சர்ச்சை வசனம்: இதற்கிடையே படம் ஒருபக்கம் வசூல் ரீதியாக அடிவாங்கிக்கொண்டிருக்க புதிய சர்ச்சை ஒன்று எழுந்தது. அதாவது படத்தில் அனுமன் ராவணன் பற்றி பேசும் வசனத்துக்கு ரசிகர்களில் ஒரு தரப்பினர் எதிர்ப்பை பதிவு செய்து கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் எதிர்ப்பு தொடர்ந்து வலுத்ததால் வசனத்தை மாற்றியமைக்கப்போகிறோம் என படக்குழு அறிவித்திருக்கிறது. ரசிகர்களின் எண்ணங்களையும் அவர்களது உணர்வுகளை மதிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
ஆதிபுருஷ் எழுத்தாளர் விளக்கம்: முன்னதாக இந்த விவகாரம் குறித்து படத்தின் இணை எழுத்தாளர் மனோஜ் முண்டஷிர், எனது சொந்த சகோதரர்கள் சமூக வலைதளங்களில் எனக்கெதிராக அநாகரீகமான வார்த்தைகளை எழுதினர். என் தாயைப் பற்றி அவதூறாக எழுதினார்கள்.ஒவ்வொரு தாயையும் தனது தாயாகக் கருதும் ஸ்ரீ ராமரை மறந்து இப்படி பேசும் அளவுக்கு என் சகோதரர்களுக்கு எங்கே திடீரென்று மனக்கசப்பு ஏற்பட்டது” என குறிப்பிட்டிருந்தார்.