சென்னை: கோலிவுட்டின் உச்ச நடிகர்களில் ஒருவரான அஜித்துக்கு பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர்.
நடிகர், பைக் ரேஸர் என ரியல் ஹீரோவாக வலம் வரும் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளார்.
இந்நிலையில், தனது படங்களுக்கான இயக்குநர்களை அஜித் தேர்ந்தெடுக்கும் ரகசியம் குறித்து தெரியவந்துள்ளது.
அஜித்தின் சீக்ரெட் ஆஃப் சக்சஸ்: கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான அஜித்தின் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படும். ஆரம்ப கால படங்களில் காதல் மன்னனாக வலம் வந்த அஜித், அடுத்தடுத்து மாஸ் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார். அதேநேரம் தனது ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்ட பின்னரும், அஜித்தின் மாஸ் கொஞ்சமும் குறையவில்லை.
இந்நிலையில், அஜித் நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியான துணிவு, சூப்பர் ஹிட் அடித்தது. அதனைத் தொடர்ந்து தற்போது விடாமுயற்சி படத்தில் நடிக்கவுள்ளார். அஜித்தின் 62வது படமாக உருவாகவுள்ள இதனை மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். முன்னதாக இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அவரது ஸ்கிரிப்ட் சரியில்லை என ஏகே 62-வில் இருந்து நீக்கப்பட்டார்.
அதன்பின்னரே ஏகே 62 படமான விடாமுயற்சியில் இணைந்தார் மகிழ் திருமேனி. அதேபோல் அஜித்தின் ஏகே 63 படத்தை சிறுத்தை சிவா இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படங்களை இயக்கி ஹிட் கொடுத்த சிவா, மீண்டும் அஜித்துடன் இணையவுள்ளது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரம் அஜித் தனது படங்களுக்கான இயக்குநர்களை தேர்ந்தெடுப்பது குறித்து சில தகவல்கள் வைரலாகி வருகின்றன. அதன்படி, அஜித் முதலில் படத்தின் கதைக்கு தான் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பாராம். அதன்பின்னர் அந்த இயக்குநரை சந்தித்தப் பிறகு 10 நாட்களுக்குள் எதாவது நல்லது நடக்கிறதா என காத்திருப்பாராம். அப்படி நடந்துவிட்டால் அந்த இயக்குநருக்கு ஜாக்பாட் அடித்துவிடுமாம்.
இல்லையென்றால் இயக்குநரின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எப்படி இருக்கிறது என பார்த்துதான் அவரை கன்ஃபார்ம் செய்வாராம். அஜித் இயல்பாகவே ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கை உடையவர் தான். சாய் பாபாவின் தீவிர பக்தரான அவர், தனது படங்களின் அப்டேட், ரிலீஸ் தேதி எல்லாமே வியாழன் கிழமையில் இருக்க வேண்டும் என பார்த்துக்கொள்வார்.
ஆனால், இதற்காக 10 நாட்களில் நல்லது நடந்தால் தான் இயக்குநரை அஜித் தேர்ந்தெடுப்பார் என்பது நம்பும்படியாக இல்லை என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும், திறமை இருந்தால் அவர் யாராக இருந்தாலும் தட்டிக் கொடுப்பது தான் அஜித்தின் குணம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தன்னம்பிக்கையின் இலக்கணமாக இருக்கும் அஜித், இப்படியெல்லாம் மூடநம்பிக்கையுடன் நடந்து கொள்ள மாட்டார் எனவும் அவர்கள் பொங்கிவிட்டனர்.