நாசிக்கில் உள்ள ஆஞ்சனேரி மலையில் பகவான் அனுமன் பிறந்ததாக நம்பப்படுகிறது. ராமாயாணத்தில் ராமர் வனவாசத்தின்போது பெரும்பாலான நாள்களை நாசிக் பஞ்ச்வாடி பகுதியில்தான் கழித்தார். சீதை கடத்தப்பட்ட போது அனுமன் உதவியுடன் சீதையை ராமர் தேடினார். எனவே ராமரை வழிபடுபவர்கள் தவறாமல் அனுமனையும் வழிபடுவார்கள்.
அனுமன் பிறந்த இடமான ஆஞ்சனேரி மலைக்கு ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். இந்தத் தலம் கடல் மட்டத்தில் இருந்து 4,200 அடி உயரத்தில் இருக்கிறது. அதாவது மூன்று மலைகளைத் தாண்டித்தான் அனுமன் பிறந்த இடத்தை அடைய முடியும். தற்போது அனுமன் பிறந்த இடத்திற்கு மலையடிவாரத்தில் இருந்து நடந்து செல்ல வேண்டுமானால் குறைந்தது 2 மணியிலிருந்து 3 மணி நேரம் பிடிக்கிறது.
வயதானவர்கள் மலைக்குச் சென்று அனுமன் அவதாரத் தலத்தை தரிசிக்க முடியாத நிலை இருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு அனுமன் மலைக்கு ரூ.377 கோடியில் ரோப் கார் வசதியை ஏற்படுத்தத் திட்டமிட்டு இருக்கிறது. இந்த ரோப் கார் வசதியை ஏற்படுத்த ஏற்கெனவே டெண்டர் விடப்பட்டுள்ளது.
மூன்று மலையையும் கடக்க மொத்தம் 6 கி.மீ நீளத்திற்கு ரோப் கார் வசதி செய்யப்பட இருக்கிறது. இந்தப் பணி பிரமஹிரி மலையேற்ற பாயின்ட்டில் இருந்து தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளில் செய்து முடிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது.
இப்பணி முடிக்கப்பட்டால் சில நிமிடங்களில் அனுமன் மலைக்குச் சென்று அவர் பிறந்த இடத்தை தரிசிக்க முடியும். மத்திய அரசு பர்வரத்மலா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் புனிதத் தலங்கள் மற்றும் சுற்றுலா மையங்களில் 99 கி.மீ நீளத்திற்கு ரோப் கார் வசதியை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது.
இதில் ஆஞ்சனேரி மலையும் அடங்கும். இது தவிர ஸ்ரீநகரில் இருந்து சங்கராசார்யர் கோயிலுக்கு ஒரு கி.மீ தூரத்திற்கும், கர்னூலில் உள்ள ஸ்ரீசைலம் ஜோதிர்லிங்கத்திற்கு கிருஷ்ணா ஆற்றின் மீதும் ரோப் கார் வசதி அமைக்கப்பட இருக்கிறது.
குவாலியர் கோட்டைக்கு ஒன்றும், லேஹ் அரண்மனைக்கு ஒன்றும் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. உஜ்ஜைனியில் உள்ள மகாகாலேஷ்வர் கோயிலில் 2 கி.மீ தூரத்திற்கு ரோப் கார் வசதியை ஏற்படுத்தும் திட்டம் ஏற்கெனவே தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. இது தவிர வாரனாசிக்கு ஒன்றும், கேதர்நாத்தில் ஒன்றும், உத்தரகாண்ட் ஹெம்குண்ட் சாஹிப்பில் ஒன்றும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொடைக்கானலில் இருந்து பழனிக்கு 12 கி.மீ தூரத்திற்கு ரோப் கார் வசதியை ஏற்படுத்தும் திட்டமும் இருக்கிறது. ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள பிச்லி மகாதேவ் ஆலயத்திற்கு 3 கி.மீ தூரத்திற்கு ரோப் கார் வசதி ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தையும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆஞ்சனேரி மலைக்குச் செல்லவேண்டுமானால் முதலில் நாசிக் அருகில் உள்ள திரிம்பகேஷ்வர் செல்லவேண்டும். அங்கிருந்து 10 கி.மீ தூரத்திற்கு மலையில் நடந்து சென்றால் அனுமன் பிறந்த இடத்தை அடைய முடியும். மலை உச்சியில் குகை ஒன்று இருக்கிறது. அந்த குகையில்தான் அனுமன் பிறந்ததாக நம்பப்படுகிறது. இது தவிர மலை உச்சியில் அனாஜனி மாதா கோயிலும் இருக்கிறது. மழைக் காலத்தில் சென்றால் இயற்கையை ரசித்தபடி செல்லலாம். ஆனால் தொடர் மழை ஏற்பட்டால் மலையில் ஏறுவதும் கடினமாகும்.