Doctor Vikatan: சளி பிடிக்கும் போது வாசனையை உணர முடியாமல் போவது ஏன்? சைனஸ் பிரச்னைக்குச் செய்யப்படும் அறுவை சிகிச்சையால் வாசனை தெரியாமல் போகுமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, காது- மூக்கு- தொண்டை சிகிச்சை மருத்துவர் பி. நடராஜ்
வாசனையை உணரும் தன்மை மூக்கின் மேல் பகுதியில் இருக்கிறது. அந்த இடத்தில் காற்று போகாதபோது வாசனையை உணர முடியாது. சாதாரணமாக சளி பிடிக்கும்போது வாசனை தெரியாததை பலரும் உணர்ந்திருப்போம். சளி பிடிப்பது தவிர்த்து, மூக்கில் சதை வளர்ந்திருப்பதன் விளைவாகவும் வாசனையை உணர முடியாமல் போகலாம்.
இந்தப் பிரச்னைக்கு அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் தீர்வு காண முடியும். நீங்கள் கேட்டிருப்பது போல அறுவை சிகிச்சையால் வாசனை அறியும் உணர்வு இல்லாமல் போகும் வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. வாசனையை உணரும் பகுதியான மூக்கின் மேல் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்படுவதில்லை. அந்த இடத்தில் பெரும்பாலும் பிரச்னை இருக்காது. கீழ்ப்பகுதியில்தான் இருக்கும்.
அரிதாக சிலருக்கு மூளையில் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சை மூக்கின் வழியே செய்யப்படுவதுண்டு. அந்த மாதிரி தருணங்களில் வாசனை தெரியாமல் போகலாம். மற்றபடி சைனஸ் பிரச்னைக்கோ, மூக்கில் சதை வளர்ந்ததற்கோ செய்யப்படுகிற அறுவை சிகிச்சையால் வாசனை அறியும் உணர்வு போகாது.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவர் குறிப்பிடும் நாள்கள் வரை அவரின் அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டியிருக்கும். மூக்கில் ரத்தம் வரலாம், சளி வரலாம். அந்தப் பிரச்னைகள் தற்காலிகமானவை. ஒன்றிரண்டு வாரங்களில் சரியாகிவிடும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.