சென்னை: சர்வதேச அளவில் இன்றைய தினம் தந்தையர் தினம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த தினத்தை பெண் ஒருவர் தோற்றுவித்த நிலையில், கடந்த 1910 ஆண்டில் இந்த தினத்திற்கு அங்கீகாரம் கிடைத்தது.
1910ம் ஆண்டிலிருந்து தந்தையர் தினம் சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்கள்மூலம் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
ஆண் தேவதைகளுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்த பிரபலங்கள்: ஒரு பிள்ளையை பெற்றெடுக்க ஒரு தாய் பத்து மாதங்கள் தான் வலியை தாங்குவாள். ஆனால் தன்னுடைய குழந்தையை வாழ்நாள் முழுவதும் தாங்கும் வகையில் தன்னை தகவமைத்து கொள்வது தந்தையே. தன்னுடைய குழந்தைகளை இளவசரனாகவும் இளவரசிகளாகவும் பார்க்கும் தந்தையின் மனோபாவம் அதிகமாக வெளியில் தெரிவதில்லை. அல்லது அதை வெளிப்படுத்த தெரியாமல் தந்தை என்பவர் உள்ளார் என்றே கூற வேண்டும்.
அன்னையர் தினம் கொண்டாடப்படுவது அனைவருக்கும் தெரிந்த விஷயம். தந்தையர் தினமும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதுவும் இந்த தினத்திற்கு கடந்த 1910ம் ஆண்டிலேயே அங்கீகாரம் கிடைத்து, அதுமுதல் கொண்டாடப்பட்டு வருகிறது. தாயின் அரவணைப்பு கிடைக்காமல், தன்னுடைய தந்தையால் வளர்க்கப்பட்ட அமெரிக்க பெண் ஒருவர்தான், இந்த தினம் தோற்றுவிக்கப்பட காரணமாக அமைந்துள்ளார். அவரது முயற்சியால்தான் இந்த தினத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. சில நாடுகளில் இந்த தினத்தில் மாறுபாடு உள்ளது. ஆனாலும் பொதுவான நடைமுறையில் இன்றைய தினம் தந்தையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சர்வதேச அளவில் பல கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நமது நாட்டில் இந்த தினத்திற்கு அந்த அளவிற்கு முக்கியத்துவம் இல்லை என்றாலும் தற்போது இந்த தினம் கவனத்தை பெற்று வருகிறது. தற்போதும் தாய் இல்லாமல் தந்தையின் அரவணைப்பில், வழிகாட்டுதலில், கண்டிப்பில் வாழ்ந்துவரும் குழந்தைகள் அதிகமாகத்தான் உள்ளனர்.
இன்றைய தினத்தில் தந்தையர் தினத்தையொட்டி பிரபலங்கள் பலரும் தங்களது தந்தையுடன் புகைப்படங்களை வெளியிட்டு தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய தந்தையுடன் தானும் தன்னுடைய தங்கை நிஷா அகர்வாலும் இணைந்துள்ள புகைப்படங்களை வெளியிட்டு தந்தையர் தின வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். அவர் இல்லாமல் தாங்கள் என்ன செய்திருப்போம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனிடையே இயக்குநர் விக்னேஷ் சிவன், தன்னுடைய குழந்தைகளுடன் தான் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். வெளியில் அதிகமாக வெளிப்படாத ரியல் ஹீரோக்களான தங்களுக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் வாழ்க்கை அழகானது என்றும் குறிப்பிட்டுள்ளார். பலூன்கள் உள்ளிட்டவற்றுடன் தந்தையர் தினத்தை கொண்டாட அவர் தயாராகியுள்ளார்.
இதனிடையே நடிகை வரலட்சுமி சரத்குமாரும் இந்த தினத்தில் தன்னுடைய தந்தையான சரத்குமாருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். ஐ லவ் யூ டாடி என்றும் சரத்குமார் குறித்து தான் பெருமையடைவதாகவும் அவர் கூறியுள்ளார். தன்னுடைய வாழ்க்கையின் ரியல் ஹீரோ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே அட்லீ மற்றும் தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்துள்ள பிரியா அட்லீ, இந்த உலகத்தின் மிகச்சிறந்த தந்தை அட்லீதான் என்று கூறியுள்ளார்.
மேலும் நடிகை த்ரிஷா கிருஷ்ணன், ஏஆர் அமீன், நடிகர் காளிதாஸ் ஜெயராம், சின்னத்திரை நடிகை பிரீத்தி சஞ்சீவ், நடிகர் நானி, நடிகை காஜல் அகர்வால் உள்ளிட்டவர்களும் தங்களது தந்தையர் தின வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். இதனிடையே நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய குழந்தைகள் மற்றும் தந்தையுடன் உள்ள அடுத்தடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ஆர்த்தி ரவியும் தன்னுடைய தந்தையர் தின வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.