சென்னை: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி 6 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. விரைவில் இந்த நிகழ்ச்சியின் அடுத்த சீசன் துவங்கவுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் துவக்கம் முதலே நிகழ்ச்சியை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார் நடிகர் கமல்ஹாசன். இதற்காக தன்னுடைய படங்களின் சூட்டிங்கை கூட இவர் தள்ளி வைத்து வருகிறார்.
இந்நிலையில் விரைவில் துவங்கவுள்ள 7வது சீசனையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது நடந்து வருகிறது.
பிக்பாஸ் 7 நிகழ்ச்சிக்காக கோடிகளில் சம்பளம் வாங்கும் கமல்ஹாசன்: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி அந்த சேனலின் நம்பர் ஒன்னாக இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரங்களில் டிஆர்பியிலும் முன்னணி வகித்து வருகிறது. சிறப்பான போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி களமிறங்கி, பிக்பாஸ் வீட்டில் அவர்களின் செயல்பாடுகள், ரசிகர்களை கவரும் வகையில் அமைந்து வருகிறது. தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் எலிமினேஷன் பிராசஸ் நடைபெற்று, இறுதிச்சசுற்றும் சிறப்பாக அமைந்து வருகிறது. கடந்த சீசனில் அசீம் டைட்டிலை வெற்றிக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சி கடந்த 2017ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடந்து வருகிறது. நிகழ்ச்சியை துவக்கம் முதலே நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இடையில் அல்டிமேட் நிகழ்ச்சியை சில வாரங்கள் நடிகர் சிம்பு தொகுத்து வழங்கிய நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். இவர் தனது ஆங்கரிங்கில் சில விஷயங்களையும் புகுத்தி வருகிறார். கடந்த நிகழ்ச்சியில் புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை இவர் ரசிகர்களுடன் பகிர்ந்துக் கொண்டார்.
சினிமா, தயாரிப்பு, அரசியல் என பல்வேறு தளங்களில் பயணம் செய்து வந்தாலும் சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கமல் சிறப்பாக பயணித்து வருகிறார். இவரது ஆங்கரிங், ஏராளமான ரசிகர்களை பிக்பாஸ் நிகழ்ச்சியின் பக்கம் திருப்பிய சம்பவங்களும் உள்ளன. கடந்த சீசனில் புத்தக வாசிப்பை மக்களிடம் கொண்டு சென்ற கமல், தற்போது என்ன விஷயத்தை கொண்டுவரப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் காணப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் ஆங்கரிங் செய்யும் கமலுக்கு நிகழ்ச்சியில் பேராதரவு காணப்படுகிறது. இதையொட்டி ஒவ்வொரு சீசனிலும் அவரது சம்பளமும் உயர்ந்து வருகிறது. கடந்த சீசனில் 80 லட்சம் ரூபாய் அவர் நிகழ்ச்சிக்காக வாங்கியதாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது அவரது சம்பளம் மேலும் அதிகரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சீசனுக்காக அவர் 130 கோடி ரூபாய் சம்பளம் பேசி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ரசிகர்களை வெகுவாக கவர்ந்து டிஆர்பியிலும் சிறப்பான வரவேற்பை பெற்றுவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி, அதிகமான பொருளையும் ஈட்டிக் கொடுத்து வருகிறது. பல கோடி ரூபாய் இந்த நிகழ்ச்சி மூலம் சேனலுக்கு கிடைத்து வருகிறது. தொகுப்பாளருக்கு பல கோடி ரூபாய்களை இந்த நிகழ்ச்சி கொடுத்துவரும் நிலையில், இந்த நிகழ்ச்சியின் வருமானம் குறித்து ரசிகர்களுக்கு அதிகமான எதிர்பார்ப்பு காணப்படுகிறது.