Leo – காஷ்மீரில் என்னவெல்லாம் நடந்தது.. சீக்ரெட் பகிர்ந்த லியோ தயாரிப்பாளர்

சென்னை: Leo (லியோ) லியோ படத்தின் தயாரிப்பாலர் காஷ்மீரில் நடந்த விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.

பீஸ்ட் படத்தின் தோல்வி, வாரிசுக்கு கிடைத்த அதிகப்படியான நெகட்டிவ் விமர்சனத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார் விஜய். விஜய்க்கு மாஸ்டர் பீஸ் கொடுத்த லோகேஷ் மீண்டும் அவருடன் இணைந்திருப்பதால் படம் மெகா ஹிட்டாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

லியோ ஷூட்டிங்: லியோவின் ஷூட்டிங் முதல் ஷெட்யூலாக காஷ்மீரில் நடந்தது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கடுங்குளிரில் ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னை திரும்பிய படக்குழு பிரசாத் ஸ்டூடியோவில் ஷூட்டிங்கை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து பையனூரில் ஷூட்டிங் முடிந்தது. இப்போது ஆதித்யராம் ஸ்டூடியோவில் ஷூட்டிங் நடக்கிறது. 2000 டான்ஸ்கர்கள் பங்கேற்ற பாடல் காட்சி சமீபத்தில்தான் முடிவடைந்தது. படத்தின் முதல் பாடல் ஜூன் 22ஆம் தேதி வெளியாகவுள்ளது.

காஷ்மீரில் லியோ படக்குழு: இதற்கிடையே காஷ்மீரில் ஷூட்டிங் நடந்தபோது படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டது. அந்த மேக்கிங் வீடியோ வழக்கமாக இல்லாமல் பட்த்தில் பணியாற்றிய கடைநிலை ஊழியர்களை மையப்படுத்தி இருந்தது. இதன் காரணமாக அந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டானது. மேலும் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கும், லியோ படக்குழுவுக்கும் பலரும் தங்களது பாராட்டை தெரிவித்தனர்.

காஷ்மீரில் என்ன நடந்தது?: இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் காஷ்மீர் ஷூட்டிங்கின்போது என்னவெல்லாம் நடந்தது என்பது குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறர். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய அவர், “காஷ்மீரில் நாங்கள் 52 நாட்கள் நான் ஸ்டாப்பாக ஷூட்டிங் செய்தோம். அங்கு கடும் குளிர் இருந்தது. காஷ்மீரில் இறங்கியவுடன் விஜய் கேட்ட முதல் கேள்வி என்ன ஷூட்டிங் பண்ணிடலாமா இல்லை பேக்கப் பண்ணிட்டு சென்னை போயிடலாமா என்பதுதான். ஏனெனில் அவ்வளவு குளிர் இருந்தது.

Leo Producer Lalit Kumar Shares about Kashmir Schedule

காரை தள்ளிய விஜய்: காஷ்மீரில் இறங்கி ஹோட்டலுக்கு போகும்போது பனிப்பொழிவு காரணமாக சாலையே தெரியவில்லை. குறிப்பாக விஜய் சென்றுகொண்டிருந்த சாலை ஒருகட்டத்துக்கு மேல் ப்ளாக் ஆகிவிட்டது. அவ்வளவு பனிப்பொழிவு. உடனே காரிலிருந்து இறங்கிய விஜய் அந்த காரை தள்ளிக்கொண்டு இருந்தார். அருகில் 100 அடி பள்ளம் இருந்தது. சிறிது பிசகினாலும் அந்த பள்ளத்தில் விழுந்திருக்க வேண்டியதுதான்.

எல்லாரும் சேஃபா: அதேபோல் நாங்கள் அங்கிருந்தபோது நிலநடுக்கமும் வந்தது. நான், லோகேஷ் எல்லாம் வேறு ஹோட்டலில் தங்கியிருந்தோம். விஜய் வேறு ஹோட்டலில் தங்கியிருந்தார். நிலநடுக்கம் வந்த பிறகு முதல் ஆளாக அவர் எங்களுக்கு ஃபோன் செய்து எல்லாரும் சேஃபா என்று கேட்டார். நீங்கள் சேஃபா என்று கேட்டோம் நிலநடுக்கம் என்று சொல்கிறார்கள். எனக்கு அப்டி எதுவும் ஃபீல் ஆகவில்லை. இருந்தாலும் நான் சேஃப்தான் என்றார். அதன் பிறகுதான் அதுதொடர்பாக நாங்கள் ட்வீட் போட்டோம்.

அந்த வீடியோ ஏன்?: ஒருமுறை விஜய்க்கு 11 மணிக்குத்தான் ஷாட் என லோகேஷ் சொன்னார். சரி வந்துவிடுகிறேன் என சொல்லி காலை 7.30 மணிக்கே வந்துவிட்டார். அந்த சமயத்தில் புரொடக்‌ஷன் யூனிட் ஆட்களை பார்த்து இவர்கள் எல்லாம் எத்தனை மணிக்கு வருகிறார்கள் காலை மூன்று மணிக்கா. இவர்களுக்காக ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதன் பிறகு யோசித்து அவர்களை மையப்படுத்தி அந்த வீடியோவை நாங்கள் வெளியிட்டோம்” என்றார். அவரது இந்தப் பேட்டி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.