இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சமகால கிரிக்கெட் உலகில் தலைசிறந்த விளையாட்டு வீரராகக் கருதப்படுகிறார்.
பேட்டிங்கில் தனக்கென தனி முத்திரை பதித்த விராட் கோலி, கடந்த 2006ம் ஆண்டு முதல் முறையாக ஏ கிரேடு கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதுவும் அவர் ரஞ்சி போட்டியில் முதல் முறையாக விளையாடுவதற்கு முந்தைய நாளில் அவரது தந்தை இறந்து போனார். அப்படி இருந்தும் தந்தை இறந்த அடுத்த நாளே ரஞ்சிப் போட்டியில் தமிழ்நாட்டிற்கு எதிராக விளையாடி 90 ரன் எடுத்து கிரிக்கெட் வாழ்க்கையில் தனது முத்திரையைப் பதித்தார். இதுவே அவரது கிரிக்கெட் கரியரில் திருப்பு முனையாகவும் அமைந்தது. அதே ஆண்டில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாடினார்.
பின்னர் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சேர்க்கப்பட்டார். அதிலும் தனது முத்திரையைப் பதித்தார். தோனி தலைமையில் துணை கேப்டனாக உயர்ந்த கோலி, 2014-ம் ஆண்டு தோனி டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியதால் இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டார். 2017ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் ஒரு நாள் போட்டிக்கான கேப்டனாகவும் பதவியேற்ற பிறகு அவரது சொத்து மதிப்பு மளமளவென அதிகரிக்க ஆரம்பித்தது. தற்போதைய நிலவரப்படி விராட் கோலியின் சொத்து மதிப்பு ரூ.1050 கோடி என்கிறது ‘Stock Gro’ என்ற நிறுவனத்தில் ஆராய்ச்சி முடிவு. அதில் கோலியின் சம்பள விவரங்கள் குறித்து இன்னும் கூடுதலாகப் பல தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, விராட் கோலி இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி ஆண்டுக்கு ரூ.7 கோடி சம்பளமாகப் பெறுகிறார். அதோடு ஒரு நாள் போட்டி ஒன்றுக்கு 6 லட்சமும், டி20 போட்டிக்கு 3 லட்சமும், டெஸ்ட் போட்டிக்கு 15 லட்சமும் சம்பளமாகப் பெறுகிறார். ராயல் சேலஞ்சர்ஸ் ஐபிஎல் அணியுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்திற்காக ஆண்டுக்கு ரூ.15 கோடியை வருமானமாகப் பெறுகிறார்.
தான் சம்பாதிக்கும் பணத்தை 7 ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் கோடிக்கணக்கில் முதலீடு செய்திருக்கிறார். மேலும் சொந்தமாக 5 ஸ்டார்ட் அப் நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்.
இதில் இரண்டு நிறுவனங்கள் உணவு டெலிவரி செய்யும் ஸ்டார்ட் அப்களாகும். விராட் கோலி ஏராளமான நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிக்கிறார். மொத்தம் 26 பிராண்ட் விளம்பரங்கள் என்கிறது அந்த ஆய்வு. ஒவ்வொரு நிறுவனத்திடமும் ரூ.7.50 முதல் 10 கோடி வரை இதற்காகச் சம்பளமாகப் பெறுகிறார். இதன் மூலம் ஆண்டுக்கு 175 கோடி வருமானம் பெறுகிறார். இதில் விவோ, புளூஸ்டார், உபர், HSBC போன்ற நிறுவனங்களும் அடங்கும்.
அதே போல, விராட் கோலி, கிரிக்கெட்டைத் தாண்டி மற்ற விளையாட்டு வீரர்களுக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகிறார். அதற்குக் காரணம் அவரது கடுமையான உழைப்பு, அர்ப்பணிப்பு, ஃபிட்னஸ் மற்றும் சுறுசுறுப்புதான். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாகவே இருக்கும் இவரைப் பல கோடி பேர் பின் தொடர்கின்றனர்.
அந்த வகையில் சோஷியல் மீடியாவில் தன் தனிப்பட்ட பக்கங்களில் ஒரு பிராண்டு குறித்துப் பதிவிட இன்ஃப்ளூயன்சர் என்ற வகையில் தனிக்கட்டணம் வசூலிக்கிறார் கோலி. இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவுக்கு ரூ.8.9 கோடியும், ட்விட்டரில் பதிவிட ரூ.2.5 கோடியும் கட்டணம் வசூலிக்கிறார். மும்பையில் ரூ.34 கோடி மதிப்புள்ள வீடும், குருகிராமில் ரூ.80 கோடி மதிப்பிலான வீடும் இருக்கிறது. மேலும் ரூ.31 கோடி மதிப்புள்ள சொகுசு கார்களும் கோலியிடம் இருக்கின்றன. விராட் கோலிக்குச் சொந்தமாக கோவா கால்பந்து கிளப், டென்னிஸ் அணி, மல்யுத்த அணி போன்றவையும் இருக்கின்றன.
இன்றைய சூழ்நிலையில் உலகத்தில் கிரிக்கெட் வீரர்களில் அதிக சொத்து இருப்பது விராட் கோலிக்குத்தான் என்று இந்தப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவர் ரியல் எஸ்டேட்டிலும் அதிக அளவு முதலீடு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. விராட் கோலியின் மனைவியும் பாலிவுட்டின் டாப் நடிகைகளில் ஒருவருமான அனுஷ்கா சர்மாவின் சொத்து இதில் சேர்க்கப்படவில்லை. அதனையும் சேர்த்தால் குடும்பத்தின் சொத்து மதிப்பு மேலும் அதிகரிக்கும்.