தமிழகத்தில் ஆளும்
அரசு குறிவைக்கப்பட்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் பலரும் கூறுகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜியை வைத்து படிப்படியாக திமுகவின் முதல் குடும்பம் வரை காய் நகர்த்த ரகசிய வியூகங்கள் முன்னெடுக்கப் பட்டுள்ளதாக ஒரு தகவலும் அடிபடுகிறது. இத்தகைய பரபரப்பான சூழலில்
”சமயம் தமிழ்”
செய்தி தளத்திற்கு திமுக ஐடி விங் ஆலோசகரும், எழுத்தாளருமான மனுஷ்ய புத்திரன் பிரத்யேக பேட்டியளித்தார்.
அமலாக்கத்துறை நடவடிக்கை
அதில், செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை நடவடிக்கையை எப்படி பார்க்கிறீர்கள்? எனக் கேட்கப்பட்டது. அதற்கு, மிகவும் மோசமானதாக பார்க்கிறேன். எந்தவித சட்ட, தார்மீக அடிப்படையிலும் அல்லாமல் வன்முறை கும்பலை போல செயல்பட்டு வருகிறது. பாஜக அரசு இப்படி செய்வது முதல்முறை அல்ல. இதில் எழக்கூடிய ஒரு கேள்வி என்னவென்றால், அமலாக்கத்துறை இதுவரை நடவடிக்கை எடுத்த அனைவருமே ஏன் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களாக இருந்துள்ளார்கள்? என்பது தான்.
அதிமுக மாஜிக்கள் மீதான வழக்குகள்
அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் 8 பேர் மீது வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அமலாக்கத்துறை இதுவரை ஏன் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கேள்வி எழுப்பினார். வருமான வரி சோதனை, அமலாக்கத்துறை சோதனை போன்றவற்றால் எதிர்க்கட்சிகளை பாஜக அரசு தொடர்ந்து லாக் செய்து வருவதாக விமர்சனம் எழுகிறதே? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
செந்தில் பாலாஜி செல்வாக்கு
அதற்கு, ஒன்னும் லாக் பண்ண முடியாது. பல்வேறு மாநிலங்களிலும் ரெய்டு நடவடிக்கைகளை ஏவி விட்டார்கள். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை என்ன பாடு படுத்தினார்கள் என அனைவருக்கும் தெரியும். அதன்பிறகு ராகுல் காந்தியின் எம்.பி பதவியை பறித்தார்கள். ராகுலின் செல்வாக்கு பல மடங்கு அதிகரித்துள்ளது. அந்த வகையில் செந்தில் பாலாஜி திமுகவின் முக்கியமான தலைவராக வலிமை பெற்றிருக்கிறார்.
டார்கெட் யார் தெரியுமா?
எனவே பாஜக செய்வது எல்லாமே நேர்மாறான விளைவுகளை தான் ஏற்படுத்தும் என்றார். இன்றைய டார்கெட் செந்தில் பாலாஜி, நாளைய டார்கெட் ஸ்டாலின் எனப் பேசப்படுகிறதா? எனக் கேட்கப்பட்டது.
உள்துறை அமைச்சகம்
அதற்கு, எங்களின் டார்கெட் மோடியும், அமித் ஷாவும். 2024 மக்களவை தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை எதிர்க்கட்சிகளின் கூட்டணி பெறும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40க்கு 40 என வெற்றி பெறுவோம். கூட்டணி அரசில் திமுகவின் பங்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். மத்திய உள்துறை அநேகமாக எங்களுக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
அப்போது, சட்ட விரோதமாக இவர்கள் செய்த அனைத்து விஷயங்களுக்காகவும் சட்டத்தின் முன் நிறுத்துவோம். ஸ்டாலின் டார்கெட் என்று இவர்கள் மனப்பால் குடிக்கின்றனர். நாளைக்கு தேர்தல் முடிவுகள் வந்தால் தெரியும். யாருக்கு யார் டார்கெட் என மனுஷ்ய புத்திரன் தெரிவித்தார்.