வேலூர்: குடியாத்தம் அருகே நேற்றிரவு திடீரென மர்ம பொருள் ஒன்று வானில் இருந்து விழுந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வானில் இருந்து விழுந்த அந்த மர்ம பொருளால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.
வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் அடுத்த நெல்லூர்பேட்டையில் நேற்று வானில் இருந்து மர்ம பொருள் ஒன்று திடீரென விழுந்தது. நேற்றிரவு 7 மணியளவில் இந்த பொருள் விழுந்த நிலையில், பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
அதாவது நெல்லூர்பேட்டையில் உள்ள லிங்குன்றம் கிராமத்தில் இருக்கும் மோர்தானா கால்வாய் இந்த மர்ம பொருள் விழுந்துள்ளது. இரவு நேரத்தில் திடீரென வானில் இருந்து மர்ம பொருள் விழுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
மர்ம பொருள்: வானில் இருந்து அந்த பொருள் விழுந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உடனடியாக ஓடி வந்து பார்த்துள்ளனர். அங்கே வெள்ளை நிறத்தில் பாராசூட் போன்ற ஒரு பொருள் இருந்துள்ளது. அதேபோல அதன் அருகிலேயே சிறிய அளவில் பெட்டி ஒன்றும் இருந்துள்ளது. இதைப் பார்த்தவுடன் பொதுமக்கள் அச்சமடைந்தனர். அந்தப் பெட்டியில் என்ன இருக்கிறது. அந்தப் பெட்டியில் இருந்து தொடர்ச்சியாக சிக்னலும் வந்து கொண்டு இருந்தது.
இந்த மர்ம பொருள் எங்கே இருந்து வந்தது என எதுவுமே அவர்களுக்குப் புரியவில்லை. மர்ம பொருளால் அச்சமடைந்த போலீசார், இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த பொருளை ஆய்வு செய்தனர். அங்கிருந்த மக்களிடமும் இது குறித்து விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து சிக்னல் வந்த பாக்ஸை எடுத்துப் பார்த்துள்ளனர்.
வானிலை ஆய்வு செய்யும் கருவி அந்த சின்ன பெட்டியில் மத்திய அரசின் தேசிய வானிலை ஆய்வு மையம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும், அதில் சென்னை மீனம்பாக்கம் என முகவரி இருந்த நிலையில் மொபைல் எண் ஒன்றும் அதில் இருந்தது. இதையடுத்து போலீசார், அந்த நம்பருக்கு கால் செய்தனர். அப்போது தான் அது வானிலை மையத்திற்குச் சொந்தமானது என்றும் வானிலை குறித்த ஆய்வுகளுக்கு அனுப்பப்பட்டதும் தெரிய வந்தது.
பாராஷூட் உதவியுடன் பறக்கும் அந்த கருவி வானில் பல இடங்களுக்குச் சென்று தட்பவெப்ப நிலை, வானிலை தகவல்களைச் சேகரித்து அனுப்புமாம். பல இடங்களில் வானிலை எப்படி இருக்கும் என்பதை அறிய இதுபோன்ற கருவிகள் நமக்கு உதவும் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த கருவியையும் பாராஷூட்டையும் போலீஸ் நிலையத்திற்குக் காவலர்கள் எடுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
எதற்காக: பொதுவாக உலகெங்கும் இதுபோல சிறு பாராஷூட்களில் வானிலை சார்ந்த தகவல்களைச் சேகரிக்கக் கருவிகளை வைத்து அனுப்புவார்கள். இவை அப்படியே காற்றில் பறந்து சென்று பல்வேறு இடங்களில் இருக்கும் வானிலை சார்ந்த செய்திகளைத் துல்லியமாகச் சேகரிக்கும்.
சென்னை வானிலை ஆய்வு மையம் மட்டுமின்றி உலகெங்கும் இருக்கும் பல வானிலை மையங்களும் இதுபோல சிறு கருவிகளை பாராஷூட்களில் வைத்து அனுப்புவதை வழக்கமாகவே வைத்துள்ளது. அப்படி சென்னை வானிலை ஆய்வு மையம் அனுப்பிய கருவி தான் நேற்றைய தினம் வேலூரில் கீழே விழுந்துள்ளது.