ஆசிரியர்களை உருவாக்கும் நடிகர்
திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் எந்த துறையிலும் சாதிக்கலாம் என்பதை பலரும் நிரூபிக்கின்றனர். சிலர் மட்டும் வாய்ப்பை தன்வசப்படுத்தி வெற்றி காண்கின்றனர். அப்படி ஒருவர் தான் சினிமாத்துறையில் நடிப்பில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய சண்முகராஜா… ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த இவர் தற்போது கல்வி துறையிலும் கால்பதித்து தமிழகமெங்கும் திறமையான ஆசிரியர்களையும் உருவாக்குகிறார். இவர் கூறியதாவது:
தங்களது முதல் படம் அனுபவம்
2003ல் விருமாண்டியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் படமே நல்ல வரவேற்பை தந்தது. அதுமட்டுமின்றி அந்த படத்தை இயக்கியது கமல்ஹாசன் என்பதால் வரபிரசாதமாக அமைந்தது. முதலில் நடிக்க தயக்கமாக இருந்தது. அதன்பின் பெரிய நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
பட வாய்ப்புகளை நழுவ விட்டிருக்கீங்களா…
அதிக படங்களை தவற விட்டிருக்கேன். சில படங்களில் நடித்து கொண்டிருக்கும் போது வேறு படங்களில் வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும். நேரம் முறையாக அமையாமல் இருப்பது போன்ற காரணங்களால் படங்களை தவறவிட வேண்டிய நிலை ஏற்படும்.
அதிகம் நடித்த கதாபாத்திரங்கள்…
பெரும்பாலும் போலீஸ் கதாபாத்திரம் தான். அதை நான் விரும்பி நடித்துள்ளேன்.
எத்தனை படங்களில் நடித்துள்ளீர்கள் …
இதுவரை 85க்கு மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறேன். தற்போது பாலா இயக்கத்தில் தயாராகும் 'வணங்கான்' படத்தில் நடிக்கிறேன். இயக்குநர் நாகாவுடன் வெப்சீரிஸ் பண்ணுகிறேன். விஜய்சேதுபதியுடன் மேரி கிறிஸ்துமஸ் படத்தில் நடிக்கிறேன். சசிக்குமாருடனும் நடிக்கிறேன். ஹீரோவா நடிக்க தான் வாய்ப்பு வரவில்லை. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நல்ல முறையில் நடிக்கிறேன்.
படத்தை போல் நிஜத்திலும் நீங்க அதிக கோவப்படுவீர்களா…
சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு கோவம் வரத்தான் செய்யும்.
கல்வித்துறை மீது உங்கள் ஆர்வம் திரும்ப காரணம்…
கல்வி தான் நாட்டின் முன்னேற்றத்திற்கு காரணம். அதை கற்பிக்கும் ஆசிரியர்கள் நல்ல பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அவர்களுக்கு நாடக முறையில் கற்பிக்கும் பயிற்சியை நான் டில்லியில் பயின்று ஆசிரியர் படிப்பில் ஈடுபடும் மாணவர்களுக்கு கற்று கொடுக்கிறேன். நிகழ் நாடக மையம் அமைப்பை தொடங்கி தமிழகமெங்கும் ஆசிரியர் கல்வியியல் கல்லுாரியில் பயிற்சி கொடுக்கிறேன். இதன் மூலம் மாணவர்கள் படிக்கும் வகுப்பறையை உயிரோட்டமாக மாற்றலாம். என் இயக்கம் மூலமாக நல்ல ஆசிரியர்களை உருவாக்குகிறேன்.
இவரை வாழ்த்த – 99407 77494.