புதுடெல்லி: இந்தியாவால் தேடப்பட்டு வந்த காலிஸ்தான் புலிப்படைத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கனடாவில் அடையாளம் தெரியாத இரண்டு இளைஞர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
பஞ்சாபின் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள பர்சிங்பூர் கிராமத்தைச் சேர்ந்தவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர், காலிஸ்தான் புலிப்படைத் தலைவராக இருந்து வந்தார். கடந்த 2021-ம் ஆண்டு இந்து மதகுரு ஒருவரை தாக்கியதாக இவர் மீது வழக்கு உள்ளது. இந்த வழக்கில் நிஜ்ஜர் மற்றும் மூவருக்கு தொடர்பு உள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பின் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகை வெளியிடப்பட்ட 3 வாரத்தில், அதாவது கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் நிஜ்ஜர் குறித்து தகவல் தெரிவிப்பவருக்கு ரூ. 10 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என தேசிய புலனாய்வு அமைப்பு தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கனடாவில் அந்நாட்டு நேரப்படி நேற்று(ஞாயிறு) இரவு 8.27 மணி அளவில் அடையாளம் தெரியாத இரண்டு இளைஞர்களால் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கார் பார்க்கிங் பகுதியில் காரில் அமர்ந்திருந்தபோது அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்தில் கூடிய கனடா வாழ் சீக்கியர்களில் ஒரு பிரிவினர், காலிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி உள்ளனர். இந்தியாவால் தேடப்பட்டு வந்த தீவிரவாதி ஒருவர் கனடாவில் அடையாளம் தெரியாத இரண்டு இளைஞர்களால் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது சீக்கியர்கள் மத்தியில் முக்கிய பேசுபொருளாக மாறி இருக்கிறது.