பெங்களூரு:
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வாடிக்கையாளர்கள் அடகுவைத்த நகைகள்
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் அரக்கல்கோடு தாலுகா பெலவாடி கிராமத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ.) வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் பலரும் தங்க நகைகளை அடகு வைத்து வங்கி கடன் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த மே மாதம் 5-ந்தேதி வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த தங்க நகைகள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 30 சிறு பொட்டலங்களில் இருந்த தங்க நகைகளை பரிசோதித்தனர். இதில் 18 பொட்டலங்களில் இருந்த நகைகள் போலியானது என்பது தெரியவந்தது. மேலும் 2 பொட்டலங்களில் இருந்த தங்க நகைகள் திருடப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.
ஒப்பந்த ஊழியர் கைவரிசை
இதனால் அதிர்ச்சி அடைந்த தணிக்கை அதிகாரிகள் தங்க நகைகள் கடன் பிரிவில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்த லாவா என்பவரிடம் விசாரணை நடத்தினர்.
இதில், கடந்த 2013-ம் ஆண்டு முதல் வாடிக்கையாளர்கள் அடகு வைத்து வந்த தங்க நகைகளை லாவா எடுத்துக்கொண்டு, போலி நகைகளை அதில் வைத்து வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து வந்ததும், இவ்வாறு அவர் 18 வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளை ‘அபேஸ்’ செய்ததுடன், 2 வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைளை திருடியதும் தெரியவந்தது. இவ்வாறு அவர் மொத்தம் ரூ.1 கோடி மதிப்பிலான நகைகளை ‘அபேஸ்’ செய்தது தெரியவந்தது.
வலைவீச்சு
இதையடுத்து வங்கியின் பொது மேலாளர் அனுராதா, கோனனூர் போலீசில் லாவா மீது புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே லாவா தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
வாடிக்கையாளர்கள் அடகு வைத்த ரூ.1 கோடி நகைகளை அபேஸ் செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.