சென்னை: திமுக அமைச்சர் பொன்முடி வேண்டுமென்றே தமிழக அரசின் கருவூலத்துக்கு ரூ. 28.4 கோடிகளை இழப்பு ஏற்படுத்தியிருக்கிறார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோதமாக செம்மண் எடுத்ததாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
இதுதொடர்பாக தமிழக பாஜக அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அலமாரியில் இருந்து வெளியேறும் எலும்புக்கூடுகள் போல, திமுக அமைச்சர்களின் ஊழல் ஒவ்வொரு வாரமும் அம்பலப்பட்டு வருகிறது.
13.02.2007 முதல் 15.05.2011 வரையிலான காலகட்டத்தில் சுரங்கம் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தியதாக திமுக அமைச்சர் பொன்முடி மற்றும் பலர் மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தனது, மந்திரி பதவியை பயன்படுத்தி, சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டியதன் மூலம் திமுக அமைச்சர் பொன்முடி வேண்டுமென்றே கருவூலத்துக்கு ரூ. 28.4 கோடிகளை இழப்பு ஏற்படுத்தியிருக்கிறார்.
120 பி ஐபிசி படி, திமுக அமைச்சர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்வதற்கான வாய்ப்புகளை நிராகரிக்க முடியாது என நீதிபதி சந்திரசேகரன் குறிப்பிட்டுள்ளார். மேலும், திமுக அமைச்சர் பொன்முடி குற்றம் செய்ததாகக் கருதுவதற்கான காரணங்களையும் நீதிபதி சந்திரசேகரன் குறிப்பிட்டுள்ளார்.
முந்தைய திமுக ஆட்சியில், திமுக முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா கடத்தல் குற்றச்சாட்டின் பேரிலும், திமுக அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தியதன் பேரிலும் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
தமிழக அரசுக்கு வேண்டுமென்றே ரூ.28.4 கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்பது நாளுக்கு நாள் தெளிவாகி வரும் நிலையில், ஸ்டாலின் தனது அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்வாரா அல்லது செந்தில் பாலாஜியை எப்படி கோபாலபுரம் குடும்பம் பாதுகாக்கிறதோ அதுபோல் பொன்முடியும் பாதுகாக்கப்படுவாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
வழக்கின் பின்னணி:
கடந்த 2006-11ம் ஆண்டு காலத்தில் திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி மற்றும் உறவினர்கள் செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, கவுதம சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோருக்கு எதிராக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
விழுப்புரத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க கோரியும், வழக்கை ரத்து செய்யக் கோரியும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அனுமதியை மீறி, 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரி செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க மறுத்து விட்டார். மேலும், ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவின்படி, வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது எனக்கூறி, கவுதம சிகாமணியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.