மத்தியப் பிரதேச மாநிலம், மொரோனா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராதேஷ்யாம் தோமர் (21). இவரை ஜூன் 3-ம் தேதி முதல் காணவில்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்காததால் அவரின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கின்றனர். அந்தப் புகாரில், “எனது மகன் ராதேஷ்யாம் தோமர். அவன் ஷிவானி தோமர் (18) என்றப் பெண்ணைக் காதலித்து வந்திருக்கிறான். இந்த நிலையில், கடந்த 3-ம் தேதி முதல் அவனைக் காணவில்லை. பெண்ணின் குடும்பத்தார் எனது மகனைக் கொலைசெய்திருக்கக்கூடும் என அஞ்சுகிறேன். இது தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து, வழக்குப் பதிவுசெய்த காவல்துறை இது தொடர்பாக விசாரித்ததில் பல அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்த விவகாரம் குறித்து காவல்துறை தரப்பில்,”மொரேனா மாவட்டத்தில் உள்ள பலுபுரா என்ற கிராமத்தில் வசிக்கும் ராதேஷ்யம் தோமருக்கு, ஷிவானி தோமருடன் காதல் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு பெண்ணின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். இதையடுத்து, இருவரும் ஊரைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், இது தொடர்பாக பெண்ணின் பெற்றோரிடம் விசாரித்தோம், தனது மகளையும், அவளது காதலைனையும் துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் அவர்களின் உடலில் கல்லைக் கட்டி, முதலைகள் அதிகம் இருக்கும் சம்பல் ஆற்றில் வீசிவிட்டதாகக் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். உடல்களை மீட்க மீட்புக் குழுவினரின் உதவியின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது ஆணவக் கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.